Published : 06 Dec 2024 05:18 PM
Last Updated : 06 Dec 2024 05:18 PM
பூந்தமல்லி: சென்னை, போரூர் ஏரியில் தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை - போரூர் அம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (53). இவர் செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு வணிக வரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டில இருந்து வெளியே சென்ற செந்தில்வேல் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. ஆகவே, அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து, செந்தில்வேல் குடும்பத்தினர் எஸ்.ஆர்.எம்.சி (போரூர்) காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செந்தில்வேலை தேடி வந்தனர். இச்சூழலில், இன்று காலை போரூர் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக எஸ்.ஆர்.எம்.சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் போரூர் ஏரியில் சடலமாக மிதந்தவர், தமிழ்நாடு வணிகவரித் துறையின் துணை ஆணையராக பணிபுரிந்து வந்த செந்தில்வேல் தெரியவந்தது. இதையடுத்து, செந்தில்வேல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா, பணிச் சுமை அல்லது கடன் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT