Published : 06 Dec 2024 11:32 AM
Last Updated : 06 Dec 2024 11:32 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் 25 தோட்டக்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் நம்பி. இவரது மகன் அழகு(வயது 42). இவர் அமிர்தசரஸில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் போட் என்ற பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் திருமணமாகி 2 மகள்கள் உள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அழகுவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
கடந்த 2010-ம் ஆண்டு, அழகு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்குவதற்கான உரிமம் பெற்றுள்ளார். அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் பெருமாள்சாமி என்பவரிடம் 32-பிஸ்டல் வகையை சார்ந்த துப்பாக்கியையும், அதற்குரிய 30 குண்டுகளையும் அவர் வாங்கி உள்ளார். இதில் அவர் சோதனை செய்வதற்காக 5 குண்டுகளை பயன்படுத்தி உள்ளார். எஞ்சிய 25 குண்டுகளையும் அவர் தன் வசம் வைத்திருந்தார்.
அந்த துப்பாக்கியை அவர் பணியாற்றும் இடங்களில் வைத்திருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9-ந்தேதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு அழகு வந்தார். பின்னர் கடந்த மாதம் 9-ந்தேதி விடுமுறை முடிந்து பணிக்காக மீண்டும் அமிர்தசரஸ் புறப்பட்டுள்ளார். அப்போது சமூகரெங்கபுரத்தில் குடியிருந்து வரும் அவரது பெற்றோரிடம் இது முக்கியமான பொருள் என கூறி ஒரு பெட்டியில் தன்னுடைய துப்பாக்கி, 25 தோட்டாக்கள் மற்றும் ஒரு கத்தியை உறையில் வைத்து ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அழகுவின் பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு தங்களது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அந்த வழியாக சென்றபோது அழகுவின் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அழகுவின் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது கதவுகளை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கத்தி, துப்பாக்கி மற்றும் 25 குண்டுகளை காணவில்லை.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் அவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இது பற்றி அழகுக்கு அவரது பெற்றோர் தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக அமிர்தசரசில் இருந்து புறப்பட்டு இன்று (டிச.6) காலை ராதாபுரம் வந்து சேர்ந்தார். அவர் ராதாபுரம் போலீஸில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி, தோட்டாக்களை திருடிச்சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
விசாரணையில் இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணிக்குள் நடந்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். நேற்று அதிகாலையில் அதே பகுதியில் 95 வயது மூதாட்டியிடம் கம்மலை பறித்துச்சென்ற அதே கும்பல் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT