Published : 02 Dec 2024 10:45 AM
Last Updated : 02 Dec 2024 10:45 AM

பல்லடம் அருகே லாரி - சரக்கு வேன் மோதல்: மேற்பார்வையாளர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

காமநாயக்கன்பாளையம் அருகே இன்று அதிகாலை லாரி மீது சரக்கு  வேன் மோதி விபத்துக்குள்ளனது.

திருப்பூர்: பல்லடம் அருகே இன்று அதிகாலை நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில் இருந்து மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு பாலக்காடு நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை ராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கிருஷ்ணாபுரம் பிரிவு என்ற இடத்தில் டீசல் தீர்ந்ததால், சாலை ஓரமாக லாரியை ராஜன் நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் காங்கயத்தில் இருந்து காமநாயக்கன்பாளையத்தில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு கோழிகளை விற்பனை செய்வதற்காக, கோழிகளை ஏற்றிக்கொண்டு சித்தம்பலம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ராஜ்குமார் (35) என்பவர் கோழி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

இந்த வண்டியில் குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் பணியாளர்கள் பாபு (30), வேல்முருகன் மற்றும் ரவி, புள்ளியப்பம்பாளையத்தை சேர்ந்த மேற்பார்வையாளர் கவியரசன் (33) ஆகியோர் வந்துள்ளனர்.

இன்று அதிகாலை சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியை கவனிக்காமல் ஓட்டுநர் ராஜ்குமார் கோழி வண்டியை அதிவேகமாக இயக்கியதால், மரப்பலகையோடு நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கோழி வண்டியில் பயணித்த மேற்பார்வையாளர் கவியரசன் மற்றும் பாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீஸார் விபத்துக்குள்ளான லாரியில் கை, கால்கள் முறிவு ஏற்பட்டு சிக்கியிருந்த ஓட்டுநர் ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த 2 பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று (டிச.2) அதிகாலையிலேயே நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x