Published : 30 Nov 2024 07:24 AM
Last Updated : 30 Nov 2024 07:24 AM
சென்னை: திருமணம் செய்த மறுத்த மாணவி முகத்தின் மீது ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல் விடுத்ததாக அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தி.நகர் கண்ணம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (37). இவர் அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச் செயலராக உள்ளார். திருமணமாகி விவகாரத்து பெற்று தனியாக வசிக்கிறார். இந்நிலையில் அந்த பகுதியில் சி.ஏ. படிக்கும் ஒரு மாணவியிடம் திருமுருகன் நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் அந்த மாணவியிடம், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், அந்த மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் திருமுருகன், அந்த மாணவியிடம் தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நெருக்கடியும், தொந்தரவும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த மாணவியின் குடும்பத்தினர் தி.நகர் பகுதியிலிருந்து கோடம்பாக்கத்துக்கு கடந்த மாதம் இடம் பெயர்ந்தனர்.
இதன் பின்னரும், திருமுருகன் அந்த மாணவிக்கு மிகவும் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் திருமுருகன், அந்த மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு பயந்த அந்த மாணவி, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார், திருமுருகன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர். தலைமறைவாக இருந்த திருமுருகன் நேற்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT