Last Updated : 29 Nov, 2024 06:03 PM

 

Published : 29 Nov 2024 06:03 PM
Last Updated : 29 Nov 2024 06:03 PM

67 ஆண்டுக்கு முன் திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் கண்டுபிடிப்பு - தமிழகம் கொண்டுவர நடவடிக்கை

திருமங்கை ஆழ்வார் சிலை

சென்னை: 67 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணத்திலிருந்து திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை லண்டனில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டு பிடித்துள்ளனர். அதை தமிழகத்துக்கு கொண்டு வர இங்கிலாந்திடம் இருந்து அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பழமையான சவுந்திரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 1957 முதல் 1967ம் ஆண்டுகளுக்குள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகள் என 4 சிலைகள் திருடப்பட்டது. திருடப்பட்ட இந்த சிலைகள் கடத்தல் கும்பலால் வெளிநாட்டுக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக, தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீஸார் 2020ல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், இந்த சிலைகள் வெளிநாட்டில் வெவ்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் அஸ்மோலியன் அருங்காட்சியகத்தால், 1967-ல் வாங்கப்பட்டது கண்டறியப்பட்டது. மற்ற காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கோயிலில் திருடப்பட்ட சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டில் உள்ள உண்மையான சிலைகளை மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் ஐ.ஜி தினகரன் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஈடுபட்டனர்.

அதன்படி, அறிவியல்பூர்வமான ஆதாரங்களை தொகுத்து, நான்கு சிலைகளையும் கும்பகோணம் சவுந்திரராஜன் பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. இதில், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரதிநிதி ஒருவர், தமிழகம் வந்து, சிலை தொடர்பான உண்மைத் தன்மையை ஆராய்ந்தார். அப்போது, புலன் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி.சந்திரசேகரன் சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்று, அச்சிலை தமிழகத்தை சேர்ந்தது தான் என ஆக்ஸ்போர்டு பல்கலை பிரதிநிதி ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை. ஒப்புக் கொண்டது. விரைவில் அச்சிலை தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு, சம்பந்தப்பட்ட கும்பகோணம் சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பழையபடி வைக்கப்பட உள்ளது.

மேலும், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய சிலைகளை அமெரிக்காவில் இருந்து மீட்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, திருமங்கை ஆழ்வார் சிலையை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x