Published : 28 Nov 2024 06:04 AM
Last Updated : 28 Nov 2024 06:04 AM
சென்னை: போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, வங்கியில் ரூ.2.30 கோடி தொழில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வடபழனியில் உள்ள, அரசு பொதுத் துறை வங்கிக் கிளை ஒன்றின் மேலாளரான ராஜேந்திரன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ``சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரை ரங்காரெட்டி கார்டன் பகுதியைச் சேர்ந்த சி.என்.ரமேஷ் (57) என்பவர் மேலும் 3 பேருடன் சேர்ந்து, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் தொடங்க கடனாக ரூ.2.30 கோடி பெற்றனர்.
ஆனால், அக்கடன் தொகையை அவர்கள் திருப்பிச் செலுத்தவில்லை. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களிடம் பெற்ற கடன் தொகையை திரும்ப பெற்றுத் தர வேண்டும்'' எனப் புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் மைனர் சாமி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், குற்றச்சாட்டுக்கு உள்ளான ரமேஷ் வங்கியை ஏமாற்றும் நோக்கில் ‘வி டெக் பார்க்’ என்ற நிறுவனத்தை பெயரளவில் போலியாக தொடங்கி, போலி மதிப்பீட்டு ஆவணங்களை தயாரித்து அதை வங்கியில் சமர்ப்பித்து முறைகேடாக ரூ.2.30 கோடி தொழில் கடன் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் 3 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT