Published : 28 Nov 2024 06:54 AM
Last Updated : 28 Nov 2024 06:54 AM
சென்னை: சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாவட்ட வாடகைத்தாய் மருத்துவக் குழு கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்திருந்த திருவொற்றியூரை சேர்ந்த தமிழரசி (26) ஆஜராகி இருந்தார்.
அவரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றதாக போலியான பத்திரிகையை ஏற்பாடு செய்ததும், இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனக்கு ஒரு குழந்தை தான் உள்ளது என்றும், தாயின் பெயரை மாற்றி பெரியம்மாவின் பெயரை சேர்த்து பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, தமிழரசி, அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் மஞ்சு, இவர்களுக்கு உதவிய தனியார் கருத்தரிப்பு மையத்தின் கவுன்சலிங் ஊழியர் வீர சக்தி ஆகிய 3 பேரையும் மருத்துவத் துறை அதிகாரிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சென்னை அடையாறில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கோவை தம்பதிகளிடம் இதற்காக அவர்கள் ரூ.5 லட்சம் பேசி முடித்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வாடகை தாயாக செயல்பட்ட தமிழரசி, இடைத்தரகர் மஞ்சு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கருத்தரிப்பு மைய ஊழியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT