Published : 27 Nov 2024 06:52 AM
Last Updated : 27 Nov 2024 06:52 AM
ஆவடி: ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் மதுபோதையில் ரயில் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிறுவன் உட்பட 3 பேரை நேற்று ஆவடி ரயில்வே போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம்(54). பட்டாபிராம்-கோபாலபுரம் துணை மின் நிலையத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று முன்தினம் பணி முடிந்து, வீட்டுக்கு செல்வதற்காக இந்து கல்லூரி ரயில் நிலையம் வந்துள்ளார்.
தட்டிக் கேட்டதால் அடி: அப்போது, முதல் நடைமேடையில் மதுபோதையில் சுற்றித் திரிந்த 4 பேர் பிளாஸ்டிக் பைப்பால், அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட பரம சிவத்தை, போதை இளைஞர்கள் பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக தாக்கினர். இதில் பரமசிவத்தின் தலை மற்றும் வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீஸார் சம்பவ இடம் விரைந்து, பரமசிவத்தை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆவடி ரயில்வே போலீஸார், பரமசிவம் உள்ளிட்ட ரயில் பயணிகளை தாக்கியது தொடர்பாக பட்டாபிராம்- சித்தேரிக்கரை, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுபாஷ்(20), இப்ராஹிம்(23), 14 வயது சிறுவன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஓர் இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT