Published : 24 Nov 2024 06:15 AM
Last Updated : 24 Nov 2024 06:15 AM

சென்னை | போதை பொருள் பார்சல் வந்திருப்பதாக பெண் டிஐஜியை போனில் மிரட்டி பணம் பறிக்க முயற்சி

சென்னை: தடை செய்யப்பட்ட போதைப் பொருள் அடங்கிய பார்சல் வந்திருப்பதாக பெண் டிஐஜியை போனில் மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த நபரை சைபர் க்ரைம் போலீஸார் தேடி வருகின்றனர். சைபர் க்ரைம் போலீஸ் பேசுவதாக பொதுமக்களை மிரட்டி, அவர்களிடம் பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் நாடு முழுவதும் தினசரி அரங்கேறி வருகின்றவ. இதுதொடர்பாக போலீஸாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் பெண் போலீஸ் டிஐஜி-யையும் மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆயுதப்படை டிஐஜி விஜயலட் சுமியை கடந்த 19-ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சைபர் க்ரைம் போலீஸ் பேசுவதாகக் கூறியுள்ளார். பின்னர், உங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அடங்கி பார்சல், அகமதாபாத்தில் இருந்து இலங்கைக்கு சர்வதேச கொரியர் மூலம் அனுப்பட்டிருக்கிறது என கூறிய அந்தநபர், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதையடுத்து, தன்னை யாரோ மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார்கள் என்று சுதாரித்துக் கொண்ட டிஐஜி, மறுமுனையில் பேசிய நபரின் விவரங்களை கேட்டுள்ளார். உடனே, அந்த நபர் போனை துண்டித்துள்ளார். இதையடுத்து, நேற்று முன் தினம், இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் டிஐஜி விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் உள்ள கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x