Published : 22 Nov 2024 12:37 AM
Last Updated : 22 Nov 2024 12:37 AM
ஓசூர்: நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில், குமாஸ்தாவின் மனைவியும் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற நுழைவாயிலில் நேற்று முன்தினம் வழக்கறிஞர் கண்ணன் என்பவரை மற்றொரு வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாகப் பணிபுரியும் ஆனந்தகுமார் என்பவர் அரிவாளால் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த கண்ணன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, ஓசூர் ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண்.2) ஆஜரான ஆனந்த குமாரை போலீஸார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதனடிப்படையில், கண்ணனைக் கொலை செய்யத் தூண்டியதாக ஆனந்தகுமாரின் மனைவி வழக்கறிஞர் சத்யாவதியை (35) நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: அரிவாளால் வெட்டப்பட்ட கண்ணனும், ஆனந்தகுமாரின் மனைவி சத்யாவதியும் மூத்த வழக்கறிஞர்களிடம் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவருக்குமிடையே தவறான நட்பு இருந்துள்ளது. இதை ஆனந்தகுமார் கண்டித்ததால், சத்யாவதி நட்பைக் கைவிட்டார். ஆனால், சத்யாவதியின் செல்போனுக்கு ஆபாச எஸ்எம்எஸ்-களை கண்ணன் அனுப்பி வந்தார். இதனால், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் கண்ணன் மீது ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆனந்தகுமார் புகார் அளித்தார். இவர்களை சக வழக்கறிஞர்கள் சமாதானம் செய்தனர்.
அதன் பின்னரும் கண்ணன், சத்யாவதியின் செல்போனுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், கண்ணனை வெட்டி உள்ளார். இதற்கு சத்யாவதியும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT