Published : 21 Nov 2024 12:50 AM
Last Updated : 21 Nov 2024 12:50 AM
திருமணம் செய்த மறுத்ததால் ஆத்திரமடைந்து, அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியயை குத்திக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகேயுள்ள சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த முத்து மகள் ரமணி(25). மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளயில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக அடிப்படையில் கடந்த ஜூன் 10-ம் தேதி தமிழ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
அதே கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் மதன்குமார் (28). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உள்ளூரிலேயே மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ரமணியும், மதன்குமாரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதன்குமாரின் பெற்றோர், ரமணியின் பெற்றோரைச் சந்தித்து பெண் கேட்டுள்ளனர். ஆனால், மதன்குமாரின் நடவடிக்கை சரியில்லை என்று கூறி, ரமணியின் பெற்றோர் பெண் தர மறுத்துள்ளனர். இதையடுத்து, மதன்குமாரிடம் பேசுவதை ரமணி தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரமணியை மீண்டும் சந்தித்து, திருமணம் செய்து கொள்ளுமாறு மதன்குமார் கேட்டுள்ளார். ஆனால், ரமணி மறுத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு சென்ற மதன்குமார், வராண்டாவில் நின்று கொண்டிருந்த ரமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால், ரமணியின் கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் குத்திவிட்டு தப்பியோட முயன்றார்.
ஆசிரியர்கள், மாணவர்களின் கூச்சலிட்டதைக் கேட்டு, பள்ளிக்கு வெளியே ஆட்சியர் வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சேதுபாவாசத்திரம் போலீஸார், மதன்குமாரை மடக்கிப் பிடித்தனர்.
இதனிடையே, பலத்த காயமடைந்த ரமணியை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரமணியைக் குத்திய மதன்குமாரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர்கள் ஆறுதல்... இதற்கிடையில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளிக்குச் சென்று, சம்பவத்தைக் கேட்டறிந்தனர். மேலும், உயிரிழந்த ஆசிரியை ரமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது பெற்றோர், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
ரூ.5 லட்சம் நிதியுதவி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தற்காலிக ஆசிரியை ரமணி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, குற்றவாளிக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும்.
ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சகஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் கண்டனம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: உயிரிழந்த ஆசிரியை குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு இல்லாத அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே சாட்சி. தமிழகத்தை சட்டம்-ஒழுங்கு இல்லாத மாநிலமாக மாற்றியதற்காக முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.
இதேபோல, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் பொ.அன்பரசன், பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோரும் ஆசிரியை கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT