Published : 20 Nov 2024 03:53 PM
Last Updated : 20 Nov 2024 03:53 PM
ஓசூர்: ஓசூர் நீதிமன்ற நுழைவு வாயிலில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் , வட்டாட்சியர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடுவதால், இந்தப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். புதன்கிழமை (நவ.20) வழக்கம்போல், நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள், போலீஸார் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு வழக்குகளுக்காக வந்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் கண்ணன் என்கிற வழக்கறிஞரை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஜே எம் 2-ல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனையடுத்து வெட்டுக் காயங்களுடன் இருந்த வழக்கறிஞர் கண்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த நகர போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்ததில், வழக்கறிஞர் கண்ணனை வெட்டியது, ஓசூரில் வழக்கறிஞர் ஒருவரிடம் கிளார்க்காக பணி செய்து வந்த ஆனந்தன் என்பதும், இவரது மனைவியும் வழக்கறிஞராக பணி செய்து வருவதும் தெரியவந்தது.
கண்ணனுக்கும், ஆனந்தனுக்கும் ஏற்கெனவே இருந்த முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். வழக்கறிஞர்களுக்கு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT