Published : 20 Nov 2024 06:34 AM
Last Updated : 20 Nov 2024 06:34 AM
சென்னை: ரஷ்ய அரசு பெயரில் ரூ.2000 கோடி முதலீடு பெற்றுத் தருவதாக கூறி சென்னை தொழில் அதிபரிடம் ரூ.7.32 கோடி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் வட்டாட்சியர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தி.நகரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார். அதில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்தோ - ரஷ்யன் அசோசியேட் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருபவர் அருண்ராஜ்(38). இவர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆலிவ் பீச்சில் வசிக்கிறார். இவர் இந்தோ-ரஷ்யன் தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதி என்று கூறி என்னிடம் அறிமுகமானார்.
மேலும், ரஷ்ய அரசு இந்திய திட்டங்களுக்காக கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்ய முன் வந்துள்ளது. திருச்சியில் நான் நடத்தி வரும் வியாபார திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை முதலீடு பெற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதற்கு அவர் கமிஷனாக என்னிடமிருந்து ரூ.7 கோடியே 32 லட்சத்து 45,000 பெற்றுக் கொண்டார்.
மேலும், எனது நிறுவனத்தில் ரஷ்ய நிறுவனம் முதலீடு செய்துள்ளதாக போலியான ரஷ்ய அரசின் லோகோ, கொடிகள் மற்றும் தகவல்களை காண்பித்தார். அவை போலி என்பது பின்னர்தான் தெரிய ஆரம்பித்தது. அருண்ராஜையும், அவரது கூட்டாளிகளையும் தொடர்பு கொண்டபோது தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, என்னிடம் மோசடி செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, அப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா மேற்பார்வையில் உதவி ஆணையர் சிவா, காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா அடங்கிய தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், புகாரில் குறிப்பிட்டிருந்த அனைத்தும் உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து மோசடிக்கு மூளையாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த அருண்ராஜ், அவரது கூட்டாளிகள் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கோட்டை குமாரன் (43), சோழவரம் நாகேந்திரன் (39) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 476 பவுன் தங்கம், 400 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.14.50 லட்சம் ரொக்கம், 11 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக அருண்ராஜ் கூட்டாளிகளான மதன் குமார், ஓய்வு பெற்ற விஏஓ தர்மன், ரூபா, விக்னேஷ்வரன், டாஸ்மாக் பிரிவு வட்டாட்சியர் விஸ்வநாதன், சசிகுமார் ஆகிய மேலும் 6 பேர் கைதாகினர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT