Published : 20 Nov 2024 03:48 AM
Last Updated : 20 Nov 2024 03:48 AM
காஞ்சிபுரம்: ஏகனாபுரம் ஊராட்சி துணைத் தலைவர் திவ்யா (35) நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக இவர் 9 முறை தீர்மானம் நிறைவேற்றியவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகேஉள்ள பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்த கிராமத்தை மையமாகக் கொண்டு 2 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்று வந்தவர் கணபதி.
இவரது மனைவி திவ்யா(35). ஏகனாபுரம் ஊராட்சி துணைத் தலைவராக இருந்த இவர், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 9 முறை தீர்மானம் நிறைவேற்ற உதவியாக இருந்தவர். இந்நிலையில், நேற்று முன்தினம் திவ்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படுவதால் திவ்யா மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட திவ்யாவுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
திவ்யா குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார் என்றும், விமான நிலைய திட்டத்தை எதிர்த்து அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அதுபோல கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்றும் போலீஸார்தெரிவித்துள்ளனர். தற்கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT