Published : 19 Nov 2024 01:38 PM
Last Updated : 19 Nov 2024 01:38 PM
சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்பனை, கடத்தல், பதுக்கலை முற்றிலும் தடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டினர் உள்பட பல்வேறு தரப்பினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணி செய்து வரும் பரணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக ஆரணியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் செல்போனை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தபோது, சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றும் பரணி என்பவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதும் ஜிபே மூலம் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, காவலர் பரணியை அழைத்து வந்து விசாரித்தபோது, மூன்று மாதங்களுக்கு முன் கிரிண்டர் ஆப் (Grindr App) மூலம் கேரளாவைச் சேர்ந்த அபிஷேக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரிடமிருந்து போதைப் பொருளை வரவழைத்து நேரடியாகவும், சக போதை பொருள் வியாபாரிகள் மூலமாகவும் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை சென்னை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் காவலர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையினிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT