Published : 18 Nov 2024 05:21 AM
Last Updated : 18 Nov 2024 05:21 AM

டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக நிஜ போலீஸ் அதிகாரியை மிரட்டிய போலி போலீஸ்

திருச்சூர்: 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் நாடு முழுவதும் புதிய மோசடி அரங்கேறி வருகிறது. பொதுமக்களை செல்போன் வீடியோ காலில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், தங்களை சிபிஐ, போலீஸ், வருமான வரி, சுங்கத் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொள்கின்றனர்.

போதை பொருள் கடத்தல், நிதி மோசடி, வரிஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அப்பாவி மக்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக மிரட்டுகின்றனர். வழக்கில் இருந்து விடுவிக்க பெரும் தொகையை கோருகின்றனர்.

டிஜிட்டல் அரெஸ்ட் விவகாரம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 65,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.4.70 லட்சம் கோடிக்கும் அதிகமாக பணம் பறிக்கப்பட்டு உள்ளது.

"டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தவொரு அரசு அமைப்பும் செல்போனில் பொதுமக்களை தொடர்பு கொண்டு டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய முடியாது" என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அனைத்து மாநில காவல் துறையினரும் இதுதொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் கேரளாவின் திருச்சூர் நகர சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியின் செல்போனில் அண்மையில் ஒரு வீடியோ கால் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை போலீஸ் அதிகாரி ஏற்று பேசினார்.

எதிர்முனையில் பேசிய நபர், போலீஸ் உடையில் மிடுக்காக மேஜையில் அமர்ந்திருந்தார். அந்த மர்ம நபர், தன்னை மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார்.

“ஹலோ நீங்கள் யார்? நீங்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு உள்ளீர்கள். உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம்" என்று மர்ம நபர் மிரட்டினார். உங்களது செல்போனில் கேமராவை ஆன் செய்யுங்கள் என்றும் மர்ம நபர் உத்தரவிட்டார்.

இதற்கு பணிவாக பதில் அளித்த சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி, “ஐயா, எனது செல்போனில் கேமரா சரியாக இயங்கவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை கைது செய்ய வேண்டாம்" என்று மன்றாடினார்.

இதனால் உற்சாகமடைந்த போலி போலீஸ் அதிகாரி, நிஜ போலீஸ் அதிகாரியை தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து மிரட்டினார். சிறிது நேரத்தில் நிஜ போலீஸ் அதிகாரி செல்போனில் கேமராவை ஆன் செய்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தினார்.

வீடியோ காலில் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியை மிரட்டி கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த போலி அதிகாரி அதிர்ச்சியில் உறைந்தார். அதுவரை மிரட்டும் தொனியில் பேசிய போலி அதிகாரி தன்னை அறியாமல் நமட்டு சிரிப்பு சிரித்து சமாளித்தார்.

“நீ, திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியிடம் பேசி கொண்டிருக்கிறாய். உனது இருப்பிடத்தை கண்டறிந்துவிட்டோம். உன்னை தேடி போலீஸ் வருகிறது" என்று நிஜ போலீஸ் அதிகாரி கூறியதும். போலி போலீஸ் அதிகாரி வீடியோ கால் அழைப்பை துண்டித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் மும்பை சைபர் கிரைம் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மும்பை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். மும்பையில் ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்து மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x