Published : 16 Nov 2024 08:38 PM
Last Updated : 16 Nov 2024 08:38 PM
ஹைதராபாத்: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை, சென்னை போலீசார் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதோடு, நடிகை கஸ்தூரிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து, அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். அதேவேளையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. அந்த வகையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நடிகை கஸ்தூரி 4 சட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்பேரில் கஸ்தூரியிடம் விசாரணை நடத்துவதற்கு எழும்பூர் போலீஸார் முடிவு செய்திருந்தனர். ஆனால், அவர் தலைமறைவானார்.
இதன் தொடர்ச்சியாக, கஸ்தூரி முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், “மனுதாரரின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கேட்டபோது, அவர் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக எதையும் நேரடியாகக் கூறவில்லை. எனினும், தெலுங்கு பேசும் அனைத்து மக்களையும் மோசமாக சித்தரித்திருப்பது தெரிகிறது. பேச்சு சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை. அதேநேரத்தில், பேச்சுரிமை என்ற பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ அல்லது சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது.
கேவலமான மற்றும் தரக்குறைவான அறிக்கை வெளியிடுபவர்கள், பேசுபவர்கள் மீது சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட்டால், அதிலிருந்து தப்ப மன்னிப்பு கோரினாலும், இனி ஏற்கப்படாது என்ற வலுவான செய்தியை நீதிமன்றம் அனுப்ப வேண்டும். இல்லையெனில் யார் வேண்டுமானாலும் வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசிவிட்டு, அதிலிருந்து தப்புவதற்காக மன்னிப்பு கோரலாம் என்றாகிவிடும். வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கான விளைவுகளை அவசியம் எதிர்கொள்ள வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, நடிகை கஸ்தூரியிடம் விசாரணை நடத்த சென்னை - எழும்பூர் காவல் துறையினர் முடிவு செய்து அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, தலைமறைவான கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். அவரை சென்னை கொண்டு வரும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT