Published : 16 Nov 2024 12:52 AM
Last Updated : 16 Nov 2024 12:52 AM
திருச்சி: திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே கொடியாலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கணபதி மகன் மதிர் விஷ்ணு என்ற விஷ்ணு (18). ஆட்டோ ஓட்டுநரான இவர், கொடியாலத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்துக்கு நேற்று அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
கொடியாலம் ரயில்வே கேட்டை கடந்து பேருந்து சென்று கொண்டிருந்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த 5 பேரில் ஒருவர், பேருந்தில் ஏறி விஷ்ணுவை கீழே தள்ளிவிட்டார். சாலையில் விழுந்த விஷ்ணுவை, அக்கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த விஷ்ணுவை அங்கிருந்தவர்கள் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
உறவினர்கள் சாலை மறியல்: இதனிடையே, விஷ்ணுவின் உடல் வைக்கப்பட்டுள்ள திருச்சி அரசு மருத்துவமனை வளாகம் முன்பு திரண்ட அவரது உறவினர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "விஷ்ணுவின் உறவுப் பெண்ணிடம் கொடியாலம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவர் தகராறு செய்துள்ளார்.
இதை தட்டிக் கேட்டதால் விஷ்ணுவுக்கும், கோகுலுக்கும் இடையே கடந்த ஆண்டு தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக கோகுல் தரப்பினர் விஷ்ணுவை தாக்கியதால் ஆத்திரமடைந்த அவரது தரப்பினர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கோகுலை, கடந்த ஆண்டு கொலை செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட விஷ்ணு, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார். எனவே, கோகுல் கொலைக்கு பழிவாங்குவதற்காக இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT