Published : 15 Nov 2024 05:28 PM
Last Updated : 15 Nov 2024 05:28 PM
விழுப்புரம்: ‘வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி தலைமை வன உரியின பாதுகாவலரின் அனுமதி பெற்று வீட்டில் வீட்டில் பாடம் செய்யப்பட்ட தந்தத்துடன் கூடிய யானை தலைகளை வைத்துக் கொள்ளலாம். அதை செய்து விற்பனை செய்ய முடியாது’ என்று வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், தந்தத்தை ஆய்வு செய்தாலே அது எத்தனை ஆண்டுகளுக்கு முன் யானையிடமிருந்து அகற்றப்பட்டது என்பது தெரிந்துவிடும் என்று கூறியுள்ளது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நேற்று (நவ.14) யானை தந்தத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகள் மற்றும் டாலரை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தலைமையிலான வனத் துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஒரு அறையில் இருந்த யானை தந்தத்தால் செய்யப்பட்ட விலை மதிப்பற்ற 4 யானை பொம்மைகள் மற்றும் டாலரை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, யானை தந்தத்தால் செய்யப்பட்ட யானை பொம்மைகளை விற்பனை செய்ய முயன்ற திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் ஈஸ்வரி, கருப்பசாமி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த முகமது ஐயாகிதீன், ராஜா, சுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்டம் . அறந்தாங்கியைச் சேர்ந்த ஜஸ்டின், திருச்சி மாவட்டம் பேட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பாலமுருகன், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறைச் சேர்ந்த பிரபாகரன், தஞ்சாவூரைச் சேர்ந்த பைசல்,ராஜ்குமார்,பார்த்தசாரதி ஆகிய 12 பேரை இன்று (நவ.15) அதிகாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையிலடைத்தனர்.
2500 கிராம் எடையுள்ள ஒரு யானை சிலை உட்பட 4 யானை சிலைகள் மற்றும் தந்தத்தால் செய்யப்பட்ட டாலர் என 6 கிலோ 500 மில்லிகிராம் எடையுள்ள கைவினைப் பொருட்கள் மற்றும் ஒரு கார், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து வனத்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் வனத்துறை அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட யானை சிலைகளை இன்று பார்வையிட்டு, வனத் துறையினரிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் சுரேஷ் சோமன், எம்எல்ஏக்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ஜெயசந்திரன், முன்னாள் எம்பி கௌதமசிகாமணி, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஜனகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வனத்துறை தகவல்: சுதந்திரத்துக்கு முன் வாழ்ந்த ராஜாக்கள் மிருகங்களை வேட்டையாடி வீட்டில் பாடம் செய்யப்பட்ட தந்தத்துடன் கூடிய யானை தலையை அவர்களின் வாரிசுகள் தற்போது விற்பனை செய்து, அதில் இருந்த தந்தத்தை கொண்டு கைவினைப்பொருட்கள் செய்து விற்பனைக்கு கொண்டு வந்தாலும் குற்றமாகுமா என வனத் துறையினரிடம் கேட்டபோது, “1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி தலைமை வன உரியின பாதுகாவலரின் அனுமதி பெற்று வீட்டில் வைத்துக் கொள்ளலாம். விற்பனை செய்ய முடியாது. மேலும் தந்தத்தை ஆய்வு செய்தாலே அது எத்தனை ஆண்டுகளுக்கு முன் யானையிடமிருந்து அகற்றப்பட்டது என்பது தெரிந்துவிடும். இது பெரிய நெட் ஒர்க். இதன் வால் மட்டுமே இப்போது பிடிபட்டுள்ளது,” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT