Published : 15 Nov 2024 12:04 PM
Last Updated : 15 Nov 2024 12:04 PM
தாம்பரம்: பல்லாவரம், ஜீவா நகர் பகுதியில் கண்டோன்மென்ட் நிர்வாகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் பணம் பறித்த, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நபரை தாம்பரம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம், ஜீவா நகர் ஆரியன் தெருவை சேர்ந்தவர் ஸ்டெல்லா மேரி(42). இவர், பல்லாவரம் கண்டோன்மென்ட் நிர்வாகத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், அங்கு உயரதிகளுக்கு கார் ஓட்டுநராக பணி புரிந்து வரும் மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரத்தை சேர்ந்த நிலேஷ்(36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தனக்கு கண்டோன்மெண்ட் நிர்வாகத்தில் உயரதிகாரிகள் பலர் நன்கு தெரியும். அதனால், யாருக்கு வேண்டுமானாலும் தன்னால் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தில் அரசு வேலை வாங்கித் தர முடியும் என்று நிலேஷ் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. இதை உண்மை என நம்பிய ஸ்டெல்லா மேரி, தனது மகனுக்கு கண்டோன்மெண்ட் நிர்வாகத்தில் அட்டெண்டர் பணி வாங்கித் தருமாறு கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு, ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் உங்களது மகனுக்கு கண்டிப்பாக அட்டெண்டர் வேலை வாங்கித் தருவதாக நிலேஷ் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இதன்பேரில், மூன்று தவணைகளாக ரூ.10 லட்சத்தை அவரிடம் ஸ்டெல்லா மேரி வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அரசு வேலை வாங்கித்தரமால் பணத்தையும் திருப்பித் தராமல் நிலேஷ் காலம் கடத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், ஸ்டெல்லா மேரி, நிலேஷிடம் தனது மகனுக்கு வேலை வாங்கி தரவேண்டும் இல்லை என்றால், கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கறாராக கேட்டுள்ளார்.
இதனால், செய்வதறியாத நிலேஷ், உடனடியாக போலியாக பணி நியமன ஆணையை தயாரித்து, ஸ்டெல்லா மேரியிடம் வழங்கியதாக தெரிகிறது. இதை நம்பிய அவர், மகனுடன் கண்டோன்மெண்ட் அலுவலகத்துக்கு சென்று விசாரித்த போது, அது போலி நியமன ஆணை எனத் தெரியவந்துள்ளது.
இதனால், தான் ஏமாற்றப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது தொடர்பாக, தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்டெல்லாமேரி புகார் அளித்தார். இதனடிப்படையில், பல்லாவரம் போலீஸார் இன்று நிலேஷை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.10 லட்சம் பணிம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT