Published : 09 Nov 2024 03:47 PM
Last Updated : 09 Nov 2024 03:47 PM
கோவை: கோவையில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் போலி செயலியை உருவாக்கி ரூ.77.40 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த வினோத்(50) பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் தொழில் செய்து பணம் சம்பாதிக்க வினோத் திட்டமிட்டார். இதற்காக ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான ஒரு பிரத்யேக செயலியை தனது செல்போனில் அவர் பதிவிறக்கம் செய்தார். அதில் தொடர்பு கொண்டு வர்த்தகம் தொடர்பாக தகவல்களை பரிமாறிக் கொண்டு வந்துள்ளார்.
அச்செயலி வாயிலாக மர்ம நபர்கள் கூறியபடி தனது பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். இப்படி அவர் கடந்த இரண்டு மாதங்களில் 12 தவணைகளில் ரூ. 77.40 லட்சத்தை செயலி வாயிலாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார். அவ்வப்போது பணம் அனுப்பும்போது அவருக்கு வர்த்தகத்தில் லாபம் கிடைத்தது போல், அவரது செயலியில் இருந்த கணக்கில் தொகை சேர்ந்ததாக காட்டியுள்ளது. ஒரு கட்டத்தில் லாபம் வந்த தொகையை எடுக்க அவர் திட்டமிட்ட போது அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. தான் முதலீடு செய்த பணத்தையும் அவரால் திரும்ப எடுக்க முடியவில்லை.
இதனால் சந்தேகமடைந்த வினோத், செயலி தொடர்பாக விசாரித்தார். அதன் பின்னரே, அந்த செய்தி போலியானது எனவும், ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் செயலி போல் போலியாக செயலியை உருவாக்கி தனது பணத்தை அதில் முதலீடு செய்ய வைத்து தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து வினோத் கோவை சைபர் க்ரைம் போலீஸாரிடம் நேற்று இது தொடர்பாக புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ‘போலி செயலியை உருவாக்கி தன்னிடம் ரூ.70.40 லட்சத்தை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி இருந்தார். அதன் பேரில் சைபர் க்ரைம் போலீஸார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மோசடி, ஏமாற்றுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT