Published : 05 Nov 2024 06:42 PM
Last Updated : 05 Nov 2024 06:42 PM

தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸார் சோதனை

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடைமேடை முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

தாம்பரம் ரயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இங்கு இன்று காலை 10.45 மணியளவில், இரண்டு நபர்கள் வெடிகுண்டு வைக்க திட்டமிடுவதாக இந்தியில் பேசிக்கொண்டு இருந்ததாக குமார் என்பவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாம்பரம் ரயில் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாம்பரம் ரயில்வே போலீஸார், தாம்பரம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் உள்ள கடைகள், அலுவலகங்கள், நடைமேடை என அனைத்திலும் முழுமையாக சோதனை செய்த நிலையில் வெடிகுண்டு எதுவும் அங்கு சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு வைக்கப் போவதாக வந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது.

தொலைபேசியில் பேசிய நபரின் எண்ணைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது நந்திவரம் - கூடுவாஞ்சேரி, கோவிந்தராஜபுரம் பகுதியைச் சேர்ந்த காதர் ஹுசையனின் மகன் ஷஃபியுல்லா தான் போனில் தகவல் தெரிவித்த நபர் எனத் தெரிந்தது. இது தொடர்பாக தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் தாம்பரம் ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: குரோம்பேட்டை ஆர்.பி.ரோடு, நேரு நகரில் என்.எஸ்.என் மெட்ரிக்குலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இன்று இப்பள்ளிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்தத் தகவலின் பேரில் சிட்லபாக்கம் காவல் உதவி ஆய்வாளர் கந்தவேல் தலைமையில் தாம்பரம் வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பள்ளியில் சோதனை செய்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு இது இரண்டாவது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x