Published : 05 Nov 2024 06:52 AM
Last Updated : 05 Nov 2024 06:52 AM
சென்னை: அமைந்தகரை சிறுமி கொலை வழக்கில் கைதான பெண் நாசியா அளித்த வாக்குமூலத்தில், சிறுமி மீது தனது கணவர் ஆசைப்படுவதாக சந்தேகப்பட்டதால், ஆத்திரமடைந்து சிறுமிக்கு திருட்டுப்பட்டம் சுமத்தி, தினமும் சித்ரவதை செய்ததா தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரை மேத்தா நகரைச் சேர்ந்தவர் முகமது நிஷாத் (36), இவரது மனைவி நாசியா (30) ஆகியோர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அமர்த்தி இருந்தனர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி முகமது நிஷாத் வீட்டின் குளியல் அறையில் சிறுமி உடல் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து அமைந்தகரை போலீஸார் நடத்திய விசாரணையில் முகமது நிஷாத் குடும்பத்தினர் சிறுமியை சித்ரவதை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து தம்பதி உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் போலீஸாரிடம் நாசியா அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸார் கூறியது:
கோவை தென்னம்பாளையத்தில் உள்ள எங்களது உறவினர் வீட்டுக்கு சென்றபோது, சிறுமியின் தாயாரை சந்தித்தோம். அவரிடம் எங்கள் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக சிறுமியை அழைத்து வந்தோம். ஆனால் வீட்டு வேலைகளையும் செய்ய வைத்தோம். சம்பளம் தரவில்லை. அவரது தாயை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை.
ஏற்கெனவே என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் எங்களுக்குள் தினந்தோறும் தகராறு ஏற்படும். இதற்கிடையே சிறுமியின் மீதும் எனது கணவர் ஆசைப்படுவதாக சந்தேகப்பட்டேன். இதனால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சிறுமியை தொடர்ந்து சித்ரவதை செய்ய தொடங்கினேன்.
சிறுமியின் நெஞ்சு பகுதி உட்பட பல இடங்களில் அயர்ன் பாக்ஸ் மூலம் சூடு வைத்தேன். சிறுமி மீது என் கணவருக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக, குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என பொய்சொல்லி ஆத்திரமூட்டினேன். எங்கள் வீட்டுக்கு வரும் என் கணவரின் நண்பர் லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தியிடமும் சிறுமிக்கு திருட்டுபட்டம் கட்டினேன். என்னுடன் சேர்ந்து எனது கணவரும் சிறுமியை சித்ரவதை செய்ய தொடங்கினார்.
தீபாவளியன்று (அக்.31) லோகேஷ், ஜெயசக்தி, என் கணவரின் சகோதரி சீமா பேகம் ஆகியோர் வீட்டுக்கு வந்திருந்தனர். மற்றொரு வேலைக்காரப் பெண் மகேஸ்வரியும் உடனிருந்தார். அப்போது எனது மகனின் பிறப்பு உறுப்பை பிடித்து சிறுமி இழுத்துவிட்டதாக குற்றச்சாட்டி சத்தம் போட்டேன். இதனால் எல்லோரும் சேர்ந்து சிறுமியை அடித்தோம். அதில் சிறுமி மயங்கி விழுந்தார்.
அவர் இறந்துவிட்டதை அறிந்து உடலை குளியல் அறையில் கிடத்திவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். துர்நாற்றம் வெளியே வராமல் இருக்க வீடுமுழுவதும் ஊதுபத்தி ஏற்றி வைத்தோம். ஆனால் சிறுமியின் உடலை அப்புறப்படுத்த முடியாததால் போலீஸாருக்கு தகவல் கொடுத்தோம். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே சிறுமியின் குடும்பம் ஏழ்மையானது என்பதால் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்தநிலையில் சிறுமியின் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல பெற்றோரிடம் பணமில்லை. இதனால் சென்னையிலேயே சிறிமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT