Published : 30 Oct 2024 05:45 AM
Last Updated : 30 Oct 2024 05:45 AM

சென்னையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.27 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: சென்னையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற இருவரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் போதைப் பொருள் கும்பலின் நடமாட்டம் உள்ளதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்கும்பலை கைது செய்ய, சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் (எஸ்.பி) அரவிந்தன் உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கடந்த 22-ம் தேதி மூலக்கடை பேருந்து நிலையம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதித்தபோது அதில் 1.8 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், அதை வைத்திருந்த இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் பிடிபட்டது இலங்கையைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பது தெரியவந்தது. விஜயகுமார் கன்னியாகுமரி அகதிகள் முகாமில் வசிப்பதும், இலங்கைக்கு கடத்தும் நோக்கத்தில் போதைப் பொருளை பெற அவர் சென்னை வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மணிவண்ணன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் 900 கிராம் மெத்தம்பெட்டமைன், போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் போதைப் பொருள் விற்பனையின் மூலம் கிடைத்த ரூ.15 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் எங்கிருந்து யார் மூலமாக சென்னைக்கு கைமாற்றி கொண்டு வரப்பட்டது உட்பட பல்வேறு விவரங்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து துப்புதுலக்கி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 2.7 கிலோ மெத்தம்பெட்டமைனின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.27 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x