Published : 25 Oct 2024 06:30 AM
Last Updated : 25 Oct 2024 06:30 AM

பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை

பூந்தமல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் ஒப்பந்ததாரர்கள், பொதுமக்களிடம் பல்வேறு பணிகளுக்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சமாக பரிசு பொருட்களை பெறுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன் தினம்மாலை திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராமசந்திரமூர்த்தி தலைமையில், இன்ஸ்பெக்டர் தமிழரசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு அறைகள் மற்றும் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊழியர்களின் இருசக்கர வாகனம், கார்கள் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இரவு 10 மணியளவில் நகராட்சி அலுவலக உதவியாளர் சரத், வலிப்பு ஏற்பட்டு மயங்கினார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் வலிப்பு வந்தவருக்கு, உடல்நிலை சரியானதால் ஆம்புலன்ஸில் வந்த மருத்துவபணியாளர்கள் அவருக்கு மாத்திரைகள் அளித்தனர்.

இதற்கிடையே, விடிய விடிய நடைபெற்ற சோதனை நேற்று அதிகாலை 3 மணியளவில் நிறைவுபெற்றது. இதில், நகராட்சியின் நகரமைப்பு பிரிவில் ரூ.1.66 லட்சம், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.34,700 என, கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 700-ஐ லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ராஜ்குமார், குமாரவேல் மற்றும் ஊழியர் சரத் பாபு ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று மதியம் பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூந்தமல்லி நகராட்சி ஆணையர் லதா வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன் தினம் மாலை சென்னை, ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த சோதனையில், கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும்... தமிழகம் முழுவதிலும் 37 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் மாலை முதல் சோதனை நடத்தினர். பல இடங்களில் நேற்று காலை வரை சோதனை நீடித்தது. இதில், இடைத்தரகர்கள், சார் பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.33.50 லட்சம் ரொக்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x