Published : 24 Oct 2024 06:12 AM
Last Updated : 24 Oct 2024 06:12 AM

தீபாவளிக்கு லஞ்சம் பெறுவதாக தமிழகம் முழுவதும் புகார்: பல்வேறு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

சென்னை: தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் தமிழகம் முழுவதும் பல்வேறு துறை அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் கைமாறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதேபோல், தேண்கனிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சார்பதிவாளர், அலுவலக ஊழியர்கள் மற்றும் பத்திரம் பதிவு செய்ய வந்த பொதுமக்களிடமும் விசாரிக்கப்பட்டது. சென்னை பெரம்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம், பூந்தமல்லியில் உள்ள நகராட்சி அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

கோவை பீளமேட்டை அடுத்த காந்தி மாநகரில் நகர ஊரமைப்பு இயக்ககத்தின் இணை இயக்குநர் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கணக்கில் வராத ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை - பாலக்காடு க.க.சாவடி அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.96 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலும் கணக்கில் வராத ரூ. 1.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தில் சோதனை நடந்தது. தேனி ஆட்சியர் அலுவலகம் அருகே சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.99,500 கணக்கில் காட்டப்படாத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x