Published : 22 Oct 2024 05:49 AM
Last Updated : 22 Oct 2024 05:49 AM
மதுரை: ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குப்தா பிரசாத். இவர் கடந்த 2022 ஜூன் 6-ம் தேதி, அப்பகுதியில் நடந்த கலவரத்தின்போது கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அயனவள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இவ்வழக்கில் முக்கிய நபரான தீதி தர்மேஷ் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
மேலும், இக்கொலையில் ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது சாலைப்போக்குவரத்து துறை அமைச்சராகஇருந்த பினிபே விஸ்வநாத்தின் மூன்றாவது மகன் மருத்துவர் பினிபே ஸ்ரீகாந்த்(31) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் தேடிய நிலையில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், அவர் தமிழகத்தின் தென்மாவட்டப் பகுதியில் தங்கி இருப்பதாக ஆந்திர மாநிலபோலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருமங்கலம் பகுதியில் ஆந்திர போலீஸார் முகாமிட்டு அவரை தேடினர். நேற்று முன்தினம் இரவு பினிபே ஸ்ரீகாந்த், தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு காரில் செல்வதாக அறிந்த ஆந்திர போலீஸார், மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் கண்காணித்தனர். இரவு 9 மணிஅளவில் மதுரை அருகே எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதியில் அவர்வந்த காரை போலீஸார் மடக்கினர்.காரில் பயணித்த பினிபே ஸ்ரீகாந்தைபிடித்து கூடக்கோயில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், திருமங்கலம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி ஆந்திராவுக்கு காரில் அழைத்துச் செல்லஆயத்தமாகினர். அப்போது பினிபே ஸ்ரீ காந்த் நெஞ்சு வலிப்பதாகத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர்திருமங்கலம் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவர் களின் ஆலோசனையின்பேரில், அவர் ஆந்திராவுக்கு நேற்று காலை காரில் அழைத்துச் செல்லப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT