Published : 21 Oct 2024 07:07 PM
Last Updated : 21 Oct 2024 07:07 PM
திருநெல்வேலி: திருநெல்வேலியில் பிரபல தனியார் கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனைக்கு பிறகு அது வெறும் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்தது மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் அரவிந்த தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இலவசமாகவும், சலுகை விலையிலும் கண் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுபோல் வசதி படைத்தவர்களுக்கும் அவர்களின் வசதிக்கேற்ப நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் நாள்தோறும் இம்மருத்துவமனைக்கு திருநெல்வேலி மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும், கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வருகிறார்கள். இம்மருத்துவமனையின் கிளைகள் மதுரை, கோவையிலும் கிளைகள் உள்ளன.
இதனால் தினமும் அரவிந்த் கண் மருத்துவமனை பரபரப்புடன் செயல்படும். இந்நிலையில் இங்கு பணிபுரியும் செவிலியர் ஆறுமுகம் என்பவருக்கு இன்று மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். இன்னும் சிறிது நேரத்தில் அது வெடித்து சிதறும் என கூறியுள்ளார் இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையரிடம் தகவல் தெரிவித்தது.
திருநெல்வேலி டவுன் உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து கீழ்த்தளம் மற்றும் ஆறு தளங்களையும் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு அறையிலும் சல்லடை போட்டு தேடுதல் நடத்திய நிலையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், மிரட்டல் வெறும் புரளி என்பதும் தெரியவந்தது.
செவிலியருக்கு செல்போனில் பேசியவரின் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டபோது, அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அந்த எண் யாருடையது, எங்கிருந்து அந்தநபர் பேசினார், அவரது பெயர் விவரங்கள் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் போலீஸார் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இதையடுத்து செவிலியரை செல்போனில் தொடர்பு கொண்டவர் கோவையை சேர்ந்த மகேஷ் என்பது தெரியவந்தது.
அவர் கோவையிலுள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் முன்னாள் கேன்டீன் ஊழியர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து விசாரிக்க மாநகர போலீஸார் தீவிரம் காட்டியுள்ளனர். திருநெல்வேலியில் நாள்தோறும் அதிக மக்கள் நெருக்கடியுடன் பரபரப்பாக இயங்கி வரும் பகுதியில் பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT