Last Updated : 17 Oct, 2024 07:04 PM

 

Published : 17 Oct 2024 07:04 PM
Last Updated : 17 Oct 2024 07:04 PM

மோசடி செய்தவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது: நீதிமன்றத்தில் நடிகை கவுதமி மனு

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடிகை கவுதமி மனு தாக்கல் செய்தார். 

ராமநாதபுரம்: ரூ.3.16 கோடி நில மோடி வழக்கில் தன்னை ஏமாற்றியவருக்கு பிணை வழங்கக் கூடாது என நடிகை கவுதமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்தார்.

நடிகை கவுதமியின் சொத்துக்களை காரைக்குடியைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன் என்பவர் நிர்வகித்து வந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே துலுக்கன் குறிச்சி கிராமத்தில் 64 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்ததில் ரூ.3.16 கோடி மோசடி செய்துவிட்டதாக கடந்த மே மாதம் நடிகை கவுதமி புகார் அளித்தார். இதன் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 23.05.2024-ல் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் செபி நிறுவனம் பதிவு செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்த 64 ஏக்கர் நிலத்தை அழகப்பன் வாங்கிக் கொடுத்து ரூ. 3.16 கோடி முறைகேடு செய்ததாகவும், இவ்வழக்கில் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள், மகன்கள் சொக்கலிங்கம் அழகப்பன், சிவ அழகப்பன், மருமகள் ஆர்த்தி அழகப்பன், புரோக்கர் நெல்லியான், ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர், ரமேஷ் சங்கர் சோனாய், பாஸ்கர், விசாலாட்சி ஆகிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் ஜே.எம்.எண்.2 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அழகப்பனின் மேலாளர் மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த ரமேஷ் சங்கர் சோனாய் சிறையில் உள்ளார். இவரது பிணை மனு இன்று (அக்.17) விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை கவுதமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, இவ்வழக்கில் மோசடிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரமேஷ் சங்கர் சோனாய், எனவே அவருக்கு பிணை வழங்கக் கூடாது என மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நீதித்துறை நடுவர் பிரபாகரன், இவ்வழக்கு விசாரணை நாளை (அக்.18) நடைபெறும் என உத்தரவிட்டார்.

பின்னர் நடிகை கவுதமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனக்கு நடந்த அநீதிக்காக போராடி வருகிறேன். இதற்காக ஒத்துழைப்பு தரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கை விசாரிக்கும் போது எல்லா இடங்களிலும் தவறு நடந்துள்ளது தெரிய வருகிறது. அதனால் வழக்கு தொடரும் நிலைக்கு தள்ளப்பட்டேன். எனக்கு நியாயம் கிடைக்க கடைசி வரை போராடுவேன்,” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x