Last Updated : 16 Oct, 2024 06:23 PM

1  

Published : 16 Oct 2024 06:23 PM
Last Updated : 16 Oct 2024 06:23 PM

ஆபாச தளங்களை பார்ப்பதாக மிரட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பல் - காவல் துறை எச்சரிக்கை

சென்னை: ‘ஆபாச இணையதளங்களைப் பார்த்ததால், உங்கள் கணினி முடக்கப்பட்டது’ எனக் கூறி நூதன முறையில் மோசடிக் கும்பல் பணம் பறித்து வருகிறது. இதில், உஷாராக இருக்க சைபர் க்ரைம் போலீஸார் அறிவுரை வழங்கி உள்ளனர். பொது மக்களின் ஆசை அல்லது பய உணர்வை தூண்டி, சைபர் க்ரைம் மோசடி கும்பல், வெளிநாடுகளில் இருந்தவாறு பணம் பறித்து வருகின்றன. இதில், பணத்தை இழந்துவிடாமல் விழிப்புடன் இருக்க போலீஸார் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தற்போது புதிய வகை மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது.

இது குறித்து தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி-யான சந்தீப் மித்தல் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘உங்கள் கணினி (கம்ப்யூட்டர்) முடக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசின் சைபர் போர்டலில் இருந்து தகவல் தெரிவிப்பதுபோல் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். மேலும், இதை அழுத்தவும் என ஆப்ஷன் வரும். நீங்கள் அதை அழுத்திய உடன், நீங்கள் சில ஆபாச இணையதளங்களை பார்த்ததால் உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது என்ற செய்தியோடு, இதனால் உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற இந்திய தண்டனைச் சட்டப்பிரிவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

ரூ.30,290 அபராதத் தொகை செலுத்தினால் தண்டனையிலிருந்து விடுபடலாம். மேலும், உங்கள் கணினி மீண்டும் செயல்படும் என அரசு எச்சரித்தது போல் தகவல் வரும். இந்த அபராதத் தொகையை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மட்டுமே செலுத்த முடியும் என்ற செய்தியோடு கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் மோசடி கும்பல் வடிவமைத்துள்ளது.

அக்கும்பல் கேட்கும் தகவல்களை உள்ளீடு செய்தால் சம்பந்தப்பட்டவரின் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டு, பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மோசடி இணையதளத்துக்கு சீனா சேவை வழங்கி உள்ளதை கண்டறிந்துள்ளோம்.தற்போது இந்த சட்ட விரோத இணையதளம் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற மோசடிகளில் ஏமாறாமல் கவனமுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி குறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், “மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் அரசு இணையதளத்தைப் போலவே போலியான இணையதளத்தை உருவாக்குகிறார்கள். ஆனால், சிறிய வேறுபாடுகள் இருக்கும். அதனை கவனமுடன் பார்க்க வேண்டும். போலி இணையதளங்களில் எழுத்துப் பிழை இருக்கும். அரசாங்க இணையதளங்கள் எப்போதும் gov.in என்று முடிவடைவதால் டொமைன் பெயரைக் கவனமாக பார்க்கவும்.

கிரெடிட் கார்டு எண், சிவிவி போன்ற முக்கியமான நிதித் தகவலை உள்ளிடுவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். சைபர் க்ரைம் மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் 1930 என்ற எண்ணில் அழைக்கவும். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x