Published : 16 Oct 2024 04:00 PM
Last Updated : 16 Oct 2024 04:00 PM

இலங்கையில் ஆன்லைனில் நிதி மோசடி: இரண்டு வாரத்தில் 200 சீனர்கள் கைது

கண்டியில் கைது செய்யப்பட்ட சீனர்கள்.

ராமேசுவரம்: இலங்கையில் ஆன்லைன் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த இரண்டு வாரங்களில் 200 சீனர்களை அந்நாட்டு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் வெளிநாட்டைச் சேர்ந்த மர்ம கும்பல்கள் ஆன்லைன் மூலமாக பல்வேறு நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இது தொடர்பாக இலங்கையின் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸார் ரகசிய விசாணைகளை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த மோசடி கும்பல்கள் பல்வேறு சமூக வலைதளங்கள் மூலமாக ஆட்களை சேர்த்து அதிக லாபம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்து முதலீடு செய்ய வைத்ததும், சட்டவிரோதமாக சூதாட்டங்களை நடத்தியும் பணம் சுருட்டி வந்தது தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான கண்டியின் ஒரு நட்சத்திர ஹோட்டலில் குற்றப்புலனாய்வு போலீஸார் நடத்திய சோதனையின் போது 22 பெண்கள் உள்பட 130 சீனர்கள் ஆன்லைன் மோசடி தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 130 பேரும் அந்த நட்சத்திர ஹோட்டலின் 47 அறைகளில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து ஆன்லைன் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 20 கம்யூட்டர்கள், 123 லேப்டாப்கள், 206 ஸ்மார்ட்போன்கள் கைப்பற்றப்பட்டன.

முன்னதாக, ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டதாக அக்டோபர் 6-ம் தேதி ஹன்வெல்லையில் நடத்தப்பட்ட சோதனையின் போது 30 சீனர்களும், அக்டோபர் 7-ல் நாவளவில் 19 சீனர்களும், அக்டோபர் 10-ம் தேதி பாணந்துறையில் 20 சீனர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு, சீன நாட்டைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றோம். இந்தச் சம்பவம், இரு நாட்டு மக்களின் சொத்துகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமின்றி, சீனாவின் நற்பெயரை கடுமையாக சேதப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சீனர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் அதேநேரம், அவர்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு, இலங்கை காவல்துறைக்கு ஆதரவளிக்கின்றோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x