Published : 10 Oct 2024 06:51 AM
Last Updated : 10 Oct 2024 06:51 AM
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பவாய் சாண்டிவில்லி பகுதியில் 65 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். அந்த மூதாட்டிக்கு சர்வதேச டேட்டிங் செயலி (செல்போன் ஆப்) மூலம் பால் ருதர்போர்ட் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் தான் வேலை பார்த்து வந்த கட்டுமானப் பகுதியில் விபத்து நடந்துவிட்டது என்றும், அதில் ஒருவர் இறந்துவிட்டார் என்றும் மூதாட்டியிடம் ருதர்போர்ட்தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தன்னை அமெரிக்காவுக்கு நாடு கடத்தாமல் இருக்க தனக்கு பண உதவி வேண்டும் என்று மூதாட்டியிடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய அவர், ருதர்போர் டுக்கு ரூ.70 லட்சத்தை பிட்காயின் மூலமாக அனுப்பியுள்ளார். இந்தப் பணத்தை சில வாரங்களில் திருப்பிதருவதாகவும் ருதர்போர்ட் உறுதியளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு பார்சலில் 20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை அனுப்பியுள்ளதாக ருதர்போர்ட் தெரிவித்தார். இந்நிலையில் டெல்லி விமான நிலையத்திலிருந்து பிரியா சர்மா என்பவர், அந்த மூதாட்டிக்கு போன் செய்து 20 லட்சம் அமெரிக்க டாலர்களுடன் பார்சல் வந்துள்ளதாகவும், அது தற்போது சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பார்சலை விடுவிக்க வரி, கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று கூறி பல்வேறு வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்துள்ளார். இதை நம்பிய மூதாட்டி 2023 ஜூன் மாதம் 2024 மார்ச்வரை பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கூடுதலாக பணம் பறிக்க திட்டமிட்ட அந்தக் கும்பல், மூதாட்டிக்கு பேங்க் ஆஃப் அமெரிக்காவிலிருந்து போன் செய்வதாகவும், சுங்கத்துறை அதிகாரியிடமிருந்து பார்சல் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் மூதாட்டியின் பெயரில் ஏடிஎம் கார்ட் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு சர்வதேச செலாவணி நிதியத்திலிருந்து (ஐஎம்எஃப்) பேசுவது போலவும், இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து (ஆர்ஓஐ) மீரா பக்சி என்பவர் பேசுவதாகவும் தெரிவித்து ஏமாற்றியுள்ளனர். அந்த பார்சலில் உள்ள பணத்தை பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்தால் ரூ.17 கோடி அளவுக்கு பணம் மூதாட்டிக்கு கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மொத்தம் ரூ.1,29,43,661-ஐ மூதாட்டி செலுத்தியுள்ளார். அதன் பிறகும் பணம் கட்டுமாறு தொடர்ந்து போன்அழைப்புகள் வந்ததும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி மும்பை போலீஸில் புகார்கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து மும்பையிலுள்ள சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT