Published : 09 Oct 2024 09:10 PM
Last Updated : 09 Oct 2024 09:10 PM
திருப்பூர்: திருப்பூரில் முறைகேடாக வீட்டில் நாட்டுவெடி தயாரித்தபோது, ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது பெண் குழந்தை இன்று (அக். 9) உயிரிழந்தார். இந்த வெடி விபத்து தொடர்பாக 2 பேர் இன்று (அக்.9) கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் பாண்டியன் நகர் பொன்னம்மாள் வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (40), தனது மைத்துனர் சரவணக்குமாருக்காக (35) வீட்டில் முறைகேடாக நாட்டுவெடி தயாரித்தபோது, ஏற்பட்ட வெடி விபத்தில் சுள்ளான் (எ) குமார் (23) என்பவர் உயிரிழந்தார். 9 மாத பெண் குழந்தை ஆலியாசிரின் மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் நேற்று உயிரிழந்தனர். இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸார் தொடர்ந்து விசாரித்தபோது, அடையாளம் தெரியாத பெண் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விஜயா (52) என்பதும், தொழிலாளியாக நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்த விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்து திருப்பூர் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, மேற்குவங்கத்தை சேர்ந்த தொழிலாளர் தம்பதியரின் மகள் நிரஞ்சனா என்ற 6 வயது சிறுமி, சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.
கார்த்திகேயன், சரவணக்குமார் மீது வெடிபொருள் சட்டம் பிரிவு 3 உயிர் அல்லது உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெடி வைத்ததற்காக தண்டனை மற்றும் 5ஏ சொத்தை பறிமுதல் செய்தல், மற்றும் வெடிபொருள் சட்டம் பிரிவு 9பி உற்பத்தி, இறக்குமதி அல்லது ஏற்றுமதி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்தனர். இது தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி கூறும்போது, “கார்த்திகேயன், சரவணக்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக நாட்டு வெடி தயாரித்து வந்துள்ளனர். நாட்டு வெடி வெடிக்காத நிலையில் 25 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.
வெடித்த வெடிகளின் எண்ணிக்கை தெரியவில்லை. சரவணகுமாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன், ஈரோடு மாவட்டத்தில் வெடி தயாரிப்புக்கான உரிமம் முடிந்துவிட்டது. அவர் புதுப்பிக்கவில்லை. இதையடுத்து 2 பேரையும் திருமுருகன்பூண்டி போலீஸார் கைது செய்தனர்” என்றார். வீட்டில் நாட்டுவெடி தயாரித்து வைத்திருந்த பல கிலோ வெடிபொருள் வெடித்ததால் சுற்றியுள்ள வீடுகள் ஏராளமானவை சேதம் அடைந்த நிலையில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறும்போது, “அரசு அனுமதி வழங்கப்பட்டு நடைபெற்று வரும் பட்டாசு உற்பத்தி பணிகளானது, பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி பெறப்பட்ட வளாகங்களில் மட்டுமே நடைபெற வேண்டும். பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற விதிமீறல் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் பொதுமக்கள் 1077 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT