Published : 09 Oct 2024 06:03 PM
Last Updated : 09 Oct 2024 06:03 PM
விழுப்புரம்: விழுப்புரம், சந்தானகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் ராஜமூர்த்தி மகன் வினித் (23). இவர் விழுப்புரம் நகராட்சியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தினக்கூலி அடிப்படையில் அலுவலக உதவியாளராக பணியாற்றியுள்ளார். அப்போது ஊழியர்களின் சேம நலநிதிக்காக (பிஎஃப்) ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையை கருவூலத்தில் செலுத்தி வந்துள்ளார். அப்போது கணினியில் பதிவு செய்யும் பணியை வினித் திறமையாக மேற்கொண்டதால் தொடர்ந்து கணினி பணியை மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நகராட்சி தொழிலாளி ஒருவர் தனது பிஎஃப் பணத்தை எடுக்கச் சென்றபோது, தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லாதது குறித்து தகவலறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், கருவூல அதிகாரிகளும் தொழிலாளர்களின் சேமநலநிதி பங்களிப்பு செலுத்தப்படவில்லை என்று உள்ளாட்சி நிதி தணிக்கை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இதனிடையே, தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்ட வினித், நகராட்சி ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் சேமநல நிதியில் இருந்து சிறுகச் சிறுக ஊழியர்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை ரூ.8.01 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
அண்மையில் நகராட்சி ஊழியர் ஒருவர் தனது பிஎஃப் கணக்கில் இருந்து கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது அவரது பிஎஃப் கணக்கில் இருந்து ஏற்கனவே கடன் பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த, சம்பந்தப்பட்ட ஊழியர், இது தொடர்பாக நகராட்சிகளின் மண்டல இயக்குநருக்கு புகார் அளித்தார். இது தொடர்பாக வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் லட்சுமி, தணிக்கை துறை அலுவலர்களுடன் ஒவ்வொரு பிரிவுத் துறை அதிகாரிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் விழுப்புரம் எஸ்பி தீபக் ஸ்வாட்ச்சிடம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையிலான போலீஸார் விழுப்புரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் வினித் என்பவரை நேற்று கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அதே பகுதியை சேர்ந்த வளர்மதி, பனங்குப்பம் அஜித் குமார் ஆகியோர் மீதும் குற்றப் பிரிவு போலீஸார் வாக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து வினித்தின் சொகுசுக் கார்கள், மினிவேன் மற்றும் சொத்து ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். வினித் கருவூலக் கணக்கில் பராமரிக்கப்படும் பல்வேறு திட்ட கணக்குகள் தலைப்பிலிருந்து 2021ம் ஆண்டு முதல் பல்வேறு பெயர்களில் எவ்வித செலுத்தும் சீட்டு மற்றும் பதிவேடுகளில் ஆணையரின் ஒப்பம் பெறப்படாமல் நகராட்சிக்கு தொடர்பு இல்லாத பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.8 கோடியே ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 245 பதிவேற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட வினித் விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT