Published : 09 Oct 2024 09:42 AM
Last Updated : 09 Oct 2024 09:42 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த செல்வகுமார்(34). கடந்த வாரம் சின்னபள்ளம் சோதனைச்சாவடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது, ஒரு வாகனத்தை நிறுத்தி பணம் கேட்டதாகவும், அவர் போதையில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக ஈரோடு எஸ்.பி. ஜவகர் விசாரணை நடத்தி, செல்வகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த செல்வகுமார் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், செல்வகுமாரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினர்கள் 6 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செல்வகுமாரின் தந்தை பெருமாள் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், "சோதனைச்சாவடியில் செல்வகுமாரிடம் தேவையின்றி சிலர் தகராறில் ஈடுபட்டு, பொய்யான வீடியோ எடுத்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். அவரை தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 4 பேர் மீது அம்மாப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT