Published : 08 Oct 2024 08:34 PM
Last Updated : 08 Oct 2024 08:34 PM
சென்னை: “ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று தமிழக ரயில்வே காவல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த 4-ம் தேதி நடந்து சென்றுகொண்டிருந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஈஸ்வர், ஹரிபிரசாத், கமலேஸ்வரன், ஆல்பர்ட், யுவராஜ் ஆகியோர் கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விவகாரத்தில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடும் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப்பிரிவுகளில் ரயில்வே காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இனி வரும் காலங்களில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் இருக்கும் வகையில், ரயில்வே காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தமிழக ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர்கள் ரமேஷ், கர்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: “புதிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள் இதுபோன்று மோதலில் ஈடுபட்டால், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்கும் வகையிலான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். ஏற்கெனவே, தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்லூரி நிர்வாக ரீதியாகவும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே காவல்துறை தீவிரமாக செயல்படுகிறது. மேலும், கல்லூரி நிர்வாக தரப்பிலும் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மோதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு பல்வேறு விதமாக அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மோதல்களில் ஈடுபடுவதால், இதுபோன்று கடும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. தற்போதைய புதிய சட்டத்தின் அடிப்படையில், டிஜிட்டல் ஆதாரங்கள் இருந்தாலே சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களின் மீது வழக்குப் பதிந்து, கடும் நடவடிக்கை மேற்கொள்ளலாம். ரயில் நிலையங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் இருப்பதால், பிரச்சினைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது டிஜிட்டல் ஆதாரங்கள் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT