Published : 08 Oct 2024 06:05 PM
Last Updated : 08 Oct 2024 06:05 PM
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சீனிவாசநல்லூரில் அக்.7-ம் தேதி பாஜக நிர்வாகியைக் கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் 3 பேருக்கு எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் வட்டம், முத்துபிள்ளைமண்டபம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ராவணன் மகன் சரண்ராஜ் (24). இவர் பாஜக நலத்திட்டப் பிரிவு மாநகரச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது பெயர் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேட்டில் உள்ளது. இந்த நிலையில், அக்.7-ம் தேதி சரண்ராஜ், வழக்கு தொடர்பாக திருவிடைமருதூர் நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
சீனிவாசநல்லூர் சாலையில் வந்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத 6 பேர், அவரை ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இது தொடர்பாக திருநீலக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சரண்ராஜை, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீஸார், 6 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாகி உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் இருப்பவர்களில் செக்காங்கன்னியைச் சேர்ந்த பிரவீன்குமார் (22), சூர்யா(24), திருவலஞ்சுழியைச் சேர்ந்த அண்ணாதுரை(30) ஆகிய 3 பேரும் எதிர்பாராமல் கீழே விழுந்ததில் மூவருக்கும் கால் முறிவு ஏற்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர தமிழரசன், அரவிந்த், நிதீஷ் ஆகிய மூவரிடம் போலீஸார் ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாகி உள்ள மாயா (எ) சிலம்பரசன், விஸ்வா, மாதவன் ஆகிய 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறியது: ''கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள ஒரு கடையில் வாடகைக்கு இருந்தவரை காலி செய்வதற்காக அந்தக் கடையின் உரிமையாளர், திருப்புறம்பியத்தைச் சேர்ந்த மாயா (எ) சிலம்பரசன்(31) என்பவரை அணுகி உள்ளார். மாயா, தனது அதிகாரத்தை வைத்து அவரைக் காலி செய்யச் சொல்லி உள்ளார். உடனே, அவர், சரண்ராஜை அணுகி இது தொடர்பாக கூறியுள்ளார். இதனால் மாயாவுக்கும், சரண்ராஜூக்கும் முட்டல் ஏற்பட்டது. இதனால் 2 தரப்பினரும் ஒருவரை ஒருவர் கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் நீதிமன்றத்திற்கு சென்று வீட்டுக்குத் திரும்பிய சரண்ராஜை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். சரண்ராஜ், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது 3 பேருக்கு எதிர்பாராதவிதமாகக் கால் முறிந்ததால், அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில், பலத்த போலீஸார் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 3 பேரை ரகசிய இடத்தில் விசாரித்து வருகிறோம்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT