Published : 08 Oct 2024 05:29 AM
Last Updated : 08 Oct 2024 05:29 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்பு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னைபெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ரவுடி நாகேந்திரன், பொன்னை பாலு உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பிரபல ரவுடி சம்போசெந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இவர்கள் மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் பதுங்கி இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் தேடுதல் வியூகம் அமைத்து தனிப்படை போலீஸார் விரைவில் வெளிநாடு விரைய உள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீஸார் சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்தனர். கைதான 28 பேர் மற்றும் தலைமறைவாக இருந்து வரும் சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரது பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையை பரிசீலனைக்கு பின்பு, எழும்பூர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்தகட்டமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட வேண்டும். அந்த நடைமுறை இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, சிறையில் உள்ள 27 பேரையும் (ஒருவர் ஏற்கெனவே என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருந்தார்) நேரில் ஆஜர்படுத்துவதற்கு பதிலாக காணொலி மூலம் ஆஜர்படுத்த நீதிபதியிடம் போலீஸார் அனுமதி கோரினர். அதற்கு நீதிபதியும் அனுமதி அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, 27 பேரும்சிறையில் இருந்தபடி காணொலிமூலம் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். விசாரணைக்கு பின்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகி வரும் வழக்கறிஞர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட உள்ளது.

பொதுவாக கொலை வழக்குகளை பொறுத்தமட்டில் அமர்வு நீதிமன்றத்தில்தான் விசாரணை நடைபெறும். அந்த வகையில் குற்றப்பத்திரிகை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x