Published : 05 Oct 2024 06:11 AM
Last Updated : 05 Oct 2024 06:11 AM

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவிழ்ந்த மர்ம முடிச்சுகள் - குற்றப் பத்திரிகை சொல்வது என்ன?

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சுமார் 5,000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது மட்டும் அல்லாமல், குற்றப்பத்திரிகை மூலம் பல்வேறு மர்ம முடிச்சுகளும் அவிழ்ந்துள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சுமார் 5 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை போலீஸார் நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். அதில், பிரபல ரவுடியான சம்போசெந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் தேடப்படும் குற்றவாளிகள் என குறிப்பிட்டதோடு, அவர்களின் பெயர்கள் உட்பட 30 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரி கையில் இடம்பெற்றுள்ளன. அதுமட்டும் அல்லாமல் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டுள்ளன.

குற்றப்பத்திரிகையில் முதல் நபராக, வடசென்னையை கலக்கிய பிரபல தாதா நாகேந்திரன் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர், தற்போது ஆயுள் சிறை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரண்டாவதாக, ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அடுத்ததாக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் என பட்டியல் அடுத்தடுத்து நீள்கிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஆம்ஸ்ட்ராங் அரசியல் ரீதியிலும், சமூகரீதியிலும் அதிவேகமாக வளர்ந்துள்ளார். ஒருகாலத்தில் வடசென்னையில் தாதாவாக வலம் வந்த நாகேந்திரனுக்கு இது பிடிக்கவில்லை. அவர்களுக்குள் முன்பகையும் இருந்துள்ளது. மேலும், தனது மகனான அஸ்வத்தாமனுடன் நிலம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் பிரச்சினை செய்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் மகன் கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் எனவும் நாகேந்திரன் நம்பி உள்ளார்.

இதனால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நாகேந்திரன், சிறையில் இருந்தபடியே கொலை திட்டத்தை வடிவமைத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு எதிரானவர்களைத் தேடி உள்ளார். அப்போதுதான், ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு, அவரது தம்பி பொன்னை பாலு ஆம்ஸ்ட்ராங் மீது வன்மத்தில் இருப்பது தெரியவந்தது.

மேலும், பிரபல ரவுடியான சம்போசெந்திலும் ஆம்ஸ்ட்ராங் மீது பகையில் இருந்துள்ளார். இதையடுத்து, கொலை திட்டத்தை சிறையில் இருந்தவாறே நாகேந்திரன் விரிவுபடுத்தியுள்ளார்.

அதன்படி, நேரடியாக களத்தில் சென்று கொலை செய்யும் பொறுப்புபொன்னை பாலு தரப்பினருக்கும், பணத்தின் ஒரு பகுதியை கொடுப்பதோடு நாட்டு வெடிகுண்டு உட்பட கொலைக்கான ஆயுதங்களை ஏற்பாடுசெய்யும் பொறுப்பு சம்போ செந்திலிடமும், அனைவரையும் ஒருங்கிணைக் கும் பொறுப்பு அஸ்வத்தாமனிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

கொலை திட்டம் வெளியே கசிந்துவிடாமல் இருக்க, செல்போன் தொடர்பு எண்களின் ஐ.பி முகவரியை கண்டுபிடிக்க முடியாதபடி வி.பி.என். தொழில்நுட்பத்துடன் உரையாடல்கள் நடைபெற்றுள்ளன. கொலையாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி வழங்கப்பட்டு 6 மாத தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, யாருக்கும் சந்தேகம் வராதபடி ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் போல் சென்று ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியுள்ளனர்.

வேலூர் சிறையில் இருந்து நாகேந்திரன் சிகிச்சைக்கு வெளியே வரும்போது ஒன்றுகூடி கொலை திட்டம் குறித்து கொலையாளிகள் விவாதித்துள்ளனர். மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரூ.10 லட்சம் வரை கொலையாளிகள் செலவிட்டுள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 28 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் உலாவந்த வண்ணம் இருந்தன. ஆனால், உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், குற்றப்பத்திகையை நீதிமன்றத்தில் 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்பதால் குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக மேலும் தகவல் கிடைத்தால் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x