Published : 04 Oct 2024 06:29 AM
Last Updated : 04 Oct 2024 06:29 AM
திருச்சி: லால்குடியில் பட்டாவில் பெயர்திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம்லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் லால்குடிவட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மோகன்.இவர் 2002-ல் ரங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து, லால்குடி மங்கம்மாள்புரத்தில் உள்ள 94 சென்ட் நிலத்தை, தனது தந்தை கணேசன் பெயரில் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், அந்த பட்டாவில் நிலத்தை விற்றவர் பெயர் கிருஷ்ணசாமி என்பதற்குப் பதிலாக, கிருஷ்ணமூர்த்தி என தவறுதலாக இடம் பெற்றிருந்தது. இந்தப் பெயரை திருத்தம் செய்ய வேண்டி, கடந்த மார்ச் 5-ம் தேதி லால்குடி கோட்டாட்சியருக்கு மோகன் விண்ணப்பித்திருந்தார். இந்த மனுவை தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் சரிபார்த்து, தொடர் நடவடிக்கைக்காக லால்குடி துணை வட்டாட்சியருக்கு அனுப்பியுள்ளார்.
விண்ணப்பம் செய்து 4 மாதங்களாகியும் பெயர் திருத்தம் செய்யப்படாததால், லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற மோகன், துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை சந்தித்து, தனது மனு தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு ரவிக்குமார், மனுவைப் பரிந்துரை செய்து அனுப்ப ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு பணம் தர இயலாது என தெரிவித்த மோகனிடம், குறைந்தது ரூ.20 ஆயிரம் தந்தால்தான் மனுவை பரிந்துரை செய்வேன் என ரவிக்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மோகன், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அறிவுரைப்படி லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று சென்றமோகன், ரூ.20 ஆயிரத்தை ரவிக்குமாரிடம் அளித்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார் துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT