Last Updated : 02 Oct, 2024 07:04 PM

 

Published : 02 Oct 2024 07:04 PM
Last Updated : 02 Oct 2024 07:04 PM

விருதுநகர் ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு: பணம் கேட்பதால் அதிகாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி

ஆட்சியர் ஜெயசீலன் | கோப்புப் படம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் அவரது புகைப்படத்துடன் போலி முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பணம் கேட்கப்படுவதால் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலன் பொறுப்பு வகித்து வருகிறார். மாவட்டத்தில் நடைபெறும் அன்றாட அரசு நிகழ்வுகள், அறிவிப்புகள், புத்தகத் திருவிழா குறித்த பதிவுகள் என பல்வேறு தகவல்கள் மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. இவரது பக்கத்தை சுமார் 3,800-க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், ஆட்சியர் புகைப்படத்துன் கூடிய போலியான முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பணம் கேட்கப் படுவதால் மாவட்ட ஆட்சியரின் முகநூலை பின் தொடரும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விருதுநகர் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி. கடந்த சில தினங்களாக மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆட்சியர் பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி, அதன் மூலம் பணம் கேட்பதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. இது முற்றிலும் இணையவழி திருடர்களின் வேலையாகும். ஏற்கெனவே இதுபோன்ற பல மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயரில் போலியான முகநூல் பக்கத்தை உருவாக்கி அதன்மூலம் பலரிடமும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.

இதுபோன்ற போலியான முகநூல் பக்கத்திலிருந்து யாராவது பணம் கேட்டால் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும், இணைய வழியாக யாரேனும் கடன் தருவதாகவோ, பரிசு விழுந்துள்ளதால் அதற்கு முன்பணம் கட்டவேண்டும் என்றோ, வெளிநாட்டிலிருந்து பரிசு வந்துள்ளது, அதனை விமான நிலையத்தில் சுங்கக் கட்டணம் கட்டி வாங்கிக்கொள்ள பணம் அனுப்புமாறும் யாரேனும் தொலைபேசி வாயிலாகவோ அல்லது இணையம் வாயிலாகவோ தொடர்புகொண்டால் அதனை நம்ப வேண்டாம். இவை அனைத்தும் இணையவழி திருடர்களின் வேலையாகும்.

எனவே, விருதுநகர் மாவட்ட மக்கள் இதுபோன்ற போலியான முகநூல் அல்லது இணையவழி பணம் கேட்டால் யாரும் நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும், மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x