Published : 30 Sep 2024 06:03 AM
Last Updated : 30 Sep 2024 06:03 AM
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் அறிவழகன் (23). தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகக் கிடங்கில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அறிவழகன் பணியைமுடித்துவிட்டு, வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். மணலூர் ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது, எதிர்பாராதவகையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டிலிருந்து சென்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அறிவழகன், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஒட்டி வந்தசரண்ராஜ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீது... தகவலறிந்து அந்த இடத்துக்குச் சென்ற விருத்தாசலம் போலீஸார், உயிரிழந்த அறிவழகனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு காரில் சிகிச்சைக்காக சென்றனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைபெறும்போது அங்கு வந்த, அறிவழகனின் உறவினர்கள் மற்றும் சிலர் சேர்ந்து, அவர்களைத் தாக்கினர். அப்போது அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் புறக்காவல் நிலையத்தில் நுழைந்தனர். அந்த கும்பல் புறக்காவல் நிலைய கதவு கண்ணாடியை அடித்து உடைத்தது.
இதுகுறித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுவாமிநாதன் போலீஸில் புகார் செய்தார். இந்தப் புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப், கோகுல்,வேதாச்சலம் உள்ளிட்ட 12 பேர் மீதுவழக்கு பதிவு செய்து, அவர்களைநேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 12 பேரும், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT