Published : 29 Sep 2024 06:43 PM
Last Updated : 29 Sep 2024 06:43 PM
உதகை: நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த, பழைய குற்றவாளிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஆய்வு செய்தார்.
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் நீலகிரி மாவட்டம் உள்ளது. இதனால் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாடு நீலகிரியில் அதிகரித்து வருகிறது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு நீலகிரி மாவட்டம் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது. எனவே கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் கஞ்சா விற்பனை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருப்பது போலீஸாருக்கு பெரும் சவாலாக உள்ளது.
குன்னூர் கூடலூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை தடுக்க போலீஸார் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளிலும் இதற்காக கூடுதலாக போலீஸார் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் பழைய கஞ்சா குற்றவாளிகளின் இருப்பிடங்களில் போலீஸார் நேரில் சென்று ஆய்வு செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையிலான போலீஸார் உதகை பகுதியில் பழைய கஞ்சா குற்றவாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று அக்குற்றவாளிகள் தற்போது என்ன வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். மீண்டும் கஞ்சா தொழிலில் ஈடுபடுகிறார்களா அல்லது கஞ்சா விற்பனைக்கு மறைமுகமாக உதவுகிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தினார்.
இதையடுத்து வெளி மாநிலங்களில் எங்கிருந்து கஞ்சா நீலகிரி மாவட்டத்துக்கு கடத்தி வரப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து அவற்றை தடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதகை டிஎஸ்பி பி.யசோதா, ஆய்வாளர் முரளிதரன், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், செந்தில் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT