Published : 29 Sep 2024 09:01 AM
Last Updated : 29 Sep 2024 09:01 AM
நாமக்கல்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கோலவழியில் உள்ள 3 ஏடிஎம்களில் நேற்று முன்தினம் கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானா கொள்ளை கும்பல் வந்த கன்டெய்னர் லாரி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிடிபட்டது.
அப்போது லாரியில் இருந்தவர்கள் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பமுயன்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டம் அந்துரோல் கிராமத்தைச் சேர்ந்த ஜூமாந்தின் (37) உயிரிழந்தார். கப்லா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஹஸ்ரு (எ) ஹஜர் அலி (30) காயமடைந்தார்.
மேலும், ஹரியானாவைச் சேர்ந்த இர்பான் (32), சவுக்கீன் கான் (23), முகமது இக்ரம் (42), சபீர் (26), முபாரக் (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஜூமாந்தின்தான் கன்டெய்னர் லாரியின் உரிமையாளர். அவர் உள்ளிட்ட 3 பேர் சென்னைக்கு லாரியில் வந்துள்ளனர். மற்றவர்கள் கார் மற்றும் விமானத்தில் வந்துள்ளனர்.
எங்கும் அறை எடுத்து தங்காமல், கன்டெய்னர் லாரியிலேயே தங்கியுள்ளனர். ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த பின்னர், பணம் மற்றும் காரை கன்டெய்னர் லாரியில் ஏற்றி, சொந்த ஊருக்குச் சென்றுவிடுவார்கள்.
கேரளாவில் கொள்ளையடித்தபோது, காரை கன்டெய்னர் லாரியில் ஏற்றும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. அதை வைத்துதான் இவர்கள் பிடிபட்டுள்ளனர். இவர்களது குழுவில் 40-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
கொள்ளையடித்த பின்னர் அவர்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிடுவார்கள். பின்னர் மற்றொரு குழு, கொள்ளையில் ஈடுபட புறப்பட்டு வரும். கிருஷ்ணகிரியில் நடந்த கொள்ளையிலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது. ஓராண்டுக்கு முன் முகமது இக்ரம் தவிர மற்ற 6 பேரும் ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதாகி, மகாராஷ்டிராவில் சிறையில் இருந்துள்ளனர்.
இவர்கள் மீது கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்த கும்பல் ஏடிஎம் மையங்களை மட்டும் குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். கொள்ளை கும்பலைச் சேர்ந்த மற்றவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையே, கைதான 5 பேரும் குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஜூமாந்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
டிஜிபி நேரில் ஆய்வு: இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று நாமக்கல் மாவட்டத்துக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT