Published : 28 Sep 2024 05:20 AM
Last Updated : 28 Sep 2024 05:20 AM

குமாரபாளையம் அருகே ஏடிஎம் கொள்ளையன் போலீஸாரால் சுட்டுக் கொலை: ஹரியானா கும்பல் பிடிப்பட்டது எப்படி?

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள சன்னியாசிப்பட்டியில் போலீஸார் மடக்கிப் பிடித்த கன்டெய்னர் லாரி. (உள்படம்) போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அஜார் அலி.

நாமக்கல்: கேரள மாநில ஏடிஎம்களில் கொள்ளையடித்து, கன்டெய்னர் லாரியில் தப்ப முயன்ற ஹரியானா கொள்ளை கும்பலைச் சேர்ந்த 7 பேரை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் காயமடைந்தார்.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் வடமாநில கும்பல் கொள்ளையடித்துள்ளது. பணம் மற்றும் சொகுசு காரைராஜஸ்தான் பதிவெண் கொண்டகன்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு, அந்த கும்பல் வடமாநிலத்துக்கு தப்ப முயன்றுள்ளது.

தகவலறிந்த கேரள போலீஸார் லாரியை பிடிக்க முயன்றுள்ளனர். எனினும், அவர்களிடம் சிக்காமல் தப்பிய லாரி, தமிழக எல்லைக்குள் நுழைந்தது. இந்த கன்டெய்னர் லாரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியாகச் செல்வதாக நேற்று காலை நாமக்கல் போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன் தலைமையிலான போலீஸார் குமாரபாளையம்-வெப்படை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி, வாகனங்கள் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது.

இதையடுத்து லாரியை போலீஸார் விரட்டிச் சென்று, சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். பின்னர், லாரியை வெப்படை காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனர். வழியில் லாரி ஓட்டுநரான ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜூமான் (40) கன்டெய்னர் கதவைத் திறந்துள்ளார். உடனே ஒருவர் லாரியில் இருந்து பணப்பையுடன் குதித்து, அங்கிருந்த காவல் துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். அவருடன் ஜூமானும் தப்பி ஓட முற்பட்டுள்ளார்.

உடனே காவல் ஆய்வாளர் தவமணி துப்பாக்கியால் சுட்டதில், சம்பவ இடத்திலேயே ஜூமான் உயிரிழந்தார். அஜார் அலி (30) என்ற கொள்ளையன் கால்களில் குண்டுபாய்ந்து, காயமடைந்தார். தொடர்ந்து, லாரியில் இருந்த இர்பான் (32), சவுவ்கீன்கான் (23), முகமது குக்கரம் (42), சபீர் (26) முபாரக் (18) ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். மேலும், கன்டெய்னர் லாரி, சொகுசு கார், பணப்பை உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக வெப்படை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

சேலம் சரக டிஐஜி உமா செய்தியாளர்களிடம் கூறும்போது, "கன்டெய்னர் லாரி திருச்சூரிலிருந்து கோவை வழியாக நாமக்கல் மாவட்டம் வெப்படை வந்தபோது, பலவாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்றது. தொடர்ந்து, கொள்ளையர்கள் இருவர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளையன் ஜூமான் உயிரிழந்தார். காயமடைந்த அஜார் அலி, கோவைமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

தமிழகத்திலும் கைவரிசை? கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் ஹரியானா மாநிலத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ணகிரி உட்பட தமிழகத்தின் பல்வேறுபகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் நடந்த ஏடிஎம் கொள்ளையில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். சிசிடிவி கேமரா இல்லாத ஏடிஎம்களை குறிவைத்துபணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

ரூ.65 லட்சம் கொள்ளை... கேரள மாநிலம் திருச்சூர் கிழக்கு காவல் ஆய்வாளர் ஜியோ செய்தியாளரிடம் கூறும்போது, “திருச்சூரில் உள்ள 3 ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தைக் கொள்ளையடித்துவிட்டு, கோவை வழியாக தமிழகத்துக்குள் நுழைந்தபோது, நாமக்கல் மாவட்ட காவல் துறையினரிடம் பிடிபட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x