Published : 26 Sep 2024 10:16 AM
Last Updated : 26 Sep 2024 10:16 AM

கேரளாவுக்கு கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ராஜபாளையத்தில் 3 பேர் கைது

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே லாரியில் கோழி தீவனம் எனக்கூறி கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராஜபாளையம் வழியாக கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விருதுநகர் மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா உத்தரவின்படி குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் தன்ராஜ் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர்கள் அப்பாதுரை, கோதண்டராமன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று இரவு மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் விலக்கு பகுதியில் அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு கோழி தீவனம் கொண்டு செல்வதாக போலி பில் தயார் செய்து ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. லாரியில் இருந்த 15 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

லாரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி

மேலும் லாரி உரிமையாளரான திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை(41), ரேசன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேல்முருகன், காளிமுத்து ஆகியோரை விருதுநகர் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x