Published : 25 Sep 2024 09:10 PM
Last Updated : 25 Sep 2024 09:10 PM
சிவகாசி: சிவகாசி அருகே தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து வீணானது.
சிவகாசி - சாத்தூர் சாலையில் கிழக்கு காவல் நிலையம் அருகே மேட்டூர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக அதிக அளவிலான பட்டாசுகள் குடோனில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாலை 6 மணி அளவில் பட்டாசுகளை இறக்கி கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்ததால், நூறு அடி உயரத்திற்கு மேல் புகை எழுந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் 3 தீயணைப்பு வாகனங்கள் உதவி உடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்தால், தீயை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து வீணானது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT