Published : 23 Sep 2024 07:12 AM
Last Updated : 23 Sep 2024 07:12 AM
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலையில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் துப்பு துலக்கினர். மறைந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), அவரது கூட்டாளிகள் திருவேங்கடம் (33) உட்பட 8 பேர் கைதாகினர்.
இதுஒருபுறம் இருக்க கொலையின் பின்னணியில் இருந்ததாக, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் என திமுக, அதிமுக, பாஜக, தமாக கட்சிகளை சேர்ந்தவர்கள், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் அடுத்தடுத்து கைதாகினர்.
இவர்களில் ரவுடி நாகேந்திரன், கடந்த ஜூலை 14ல் போலீஸாரின் என்கவுன்ட்டரில் தீர்த்துக் கட்டப்பட்ட திருவேங்கடம் தவிர மீதம் உள்ள 25 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். 28வது நபராக புதூரைச் சேர்ந்த அப்பு என்பவர் கைதானார்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மட்டும் அல்லாமல், தாம்பரம் மாநகரம் சேலையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற குற்ற வழக்கு தொடர்பாகவும் பிரபல ரவுடியான கிழக்கு தாம்பரம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜா என்ற சீசிங் ராஜா (52) தேடப்பட்டு வந்தார்.
தாம்பரம் காவல் ஆணையர், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என சீசிங் ராஜாவின் புகைப்படத்துடன் நோட்டீஸ் ஓட்டி தேடி வந்தார். இந்நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜா போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வேளச்சேரி பகுதியில் துப்பாக்கியால் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்திலும் சீசிங் ராஜா சிக்கி இருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த இன்று (23.09.24) காலை சுமார் 04.30 நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரை இஷ்கான் டெம்பிள் பின்புறம் உள்ள கெனால் மன்சாலையில் வைத்து வேளச்சேரி காவல் நிலைய சட்டம் ஒழுங்குஆய்வாளர் விமல் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களிடமிருந்து சீசிங் ராஜா தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் போலீஸாரை தாக்கவும் முயன்றாராம். இதனால் தற்காப்புக்காக ஆய்வாளர் விமல் துப்பாக்கியால் சுட்டதில் இடது மார்பில் குண்டு பாய்ந்து சீசிங் ராஜா சாய்ந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் நீலாங்கரை கே.எல்.மருத்துவமனை கொண்டு வந்த போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதால் பிரேதத்தை காலை 05.45 மணிக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியான சீசிங் ராஜா ஆற்காடு சுரேஷ் வழக்கு பழிக்கு பழி தீர்ப்பேன் என்று சபதம் செய்திருந்தாராம். இந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் போலீஸார் சீசிங் ராஜாவை தேடிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை காவல் ஆணையராக அருண் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டார் அவர் பதவியேற்ற சில தினங்களிலேயே ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி தற்போது சீசிங் ராஜா என அடுத்தடுத்து மூன்று பேர் என் கவுண்டரில் போலீஸாரால் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க கணவர் சீசிங் ராஜாவை போலீசார் போலி என்கவுண்டரில் கொலை செய்துவிட்டதாக சீசிங் ராஜாவின் மனைவி குற்றம் சாட்டி உள்ளார்.
யார் இந்த சீசிங் ராஜா? சிட்லபாக்கம் காவல் நிலைய ஏ பிளஸ் ரவுடியான சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் உள்ளன. 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் குரோம்பேட்டையில் இருசக்கர வாகனங்களை சீசிங் செய்யும் வேலை செய்து வந்ததால் இவருக்கு சீசிங் ராஜா என்ற அடைமொழி பெயர் வந்துள்ளது. இவருக்கு ஜானகி, ஜான்சி, ராஜலட்சுமி ஆகிய மூன்று மனைவிகள் உள்ளனர்.
2006-ம் ஆண்டு செங்கல்பட்டு புறநகர் பகுதியில் கள்ள சாராயம் விற்பதில் ராமு என்பவருக்கும் ரமணி என்பவருக்கும் மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் சீசிங் ராஜா,ராமு உடன் சேர்ந்து ரமணியை பாலூர் காவல் நிலைய எல்லையில் கொலை செய்துள்ளார்.
2008-ம் வருடம் தனது நண்பன் ராமுவை கொலை செய்த ரமணியின் கூட்டாளியான நட்ராஜ் என்பவனை சீசிங்ராஜா செங்கல்பட்டு அருகில் உள்ள பரனூர் டோல்கேட் அருகில் வைத்து நட்ராஜை கொலை செய்தார்.
சீசிங் ராஜா 2009 ம் வருடம் தனது கூட்டாளி சிவிலி (எ) சிவலிங்கத்தை கொலை செய்த விஜி என்பவரை ராஜமங்கலம் காவல் நிலைய எல்லையில் வெட்டி கொலை செய்துள்ளார்.
2010 ம் வருடம் புளியந்தோப்பில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்த அற்காடு சுரேஷின் 2வது மனைவியான அஞ்சலையை சின்ன கேசவலு மிரட்டியதால் பூந்தமல்லி நீதிமன்றம் அருகில் சின்ன கேசவலு மற்றும் வழக்கறிஞர் பகத்சிங் ஆகியோரை தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்தார்.
2015 ம் வருடம் சீசிங்ராஜா கூட்டாளியான அம்பேத்குமார் என்பவரிடம் பாம் சரவணன் சகோதரரான தென்னரசு என்பவர் பிரச்சினை செய்து வந்ததால் தென்னரசை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெங்கல் காவல் நிலைய எல்லையில் தாமரைபாக்கம் அருகில் கொலை செய்துள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT