Published : 23 Sep 2024 06:06 AM
Last Updated : 23 Sep 2024 06:06 AM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடச் சென்றபோது தந்தை, மகன் உட்பட 3 பேர்மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு அருகேயுள்ள காளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த நீதி (48) என்பவர் குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வருகிறார்.
மலைப்பகுதியையொட்டி விவசாய நிலம் இருப்பதால், வனவிலங்குகள் நிலத்துக்கு வருவதைத் தடுக்க சட்டவிரோதமாக விவசாய நிலத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த மூக்கனூரைச் சேர்ந்த சிங்காரம் (40), அவரது மகன் லோகேஷ் (14), பெருமாபட்டு கரிபிரான் (60) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஏலகிரி மலைப் பகுதிக்கு, வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றனர்.
பின்னர் அவர்கள் மீண்டும் வீடு திரும்பியபோது முருகனுடைய நிலத்தின் வழியாக வந்துள்ளனர். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 3 பேரும் உயிரிழந்தனர். நேற்று காலை நிலத்தின் வழியாக வேலைக்குச் சென்ற சிலர் 3 பேர் உயிரிழந்திருப்பதைப் பார்த்து,குரிசிலாப்பட்டு காவல் நிலையத்துக்குத் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீஸார் மூவரின் சடலத்தையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விலங்குகளை வேட்டையாடச் சிங்காரம் கொண்டு சென்ற நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர். விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நீதி கைது செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT