Published : 20 Sep 2024 04:11 PM
Last Updated : 20 Sep 2024 04:11 PM

நாடு முழுவதும் பல்வேறு சைபர் குற்றங்களில் தொடர்புடைய இளைஞர் சென்னை சென்ட்ரலில் கைது

நாடு முழுவதும் 90-க்கும் மேற்பட்ட சைபர் மோசடி குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை சென்னையில் சென்ட்ரல் ஆர்பிஎஃப் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை: நாடு முழுவதும் 90-க்கும் மேற்பட்ட சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஆர்.பி.எஃப் போலீஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார்.

தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா நகரைச் சேர்ந்தவர் எருகல சுதர்சன் (44). இவர் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், இணையதளத்தில் முதலீடு தொடர்பான நிறுவனங்களை தேடினார். அப்போது, ஒரு நிறுவனத்தின் தொடர்பு எண் கிடைத்தது. அதைத் தொடர்பு கொண்டபோது, குறுகிய காலத்தில் முதலீட்டுப் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்ற விளம்பரம் வந்தது. அதை நம்பி, முதலில் சிறிய தொகையை முதலீடு செய்தார்.

அந்த தொகை இரட்டிப்பு ஆனது போல தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரூ.16 லட்சம் வரை முதலீடு செய்தார். அதற்கான லாபத் தொகை வந்தது போல வங்கிக் கணக்கு தகவல் வந்தது. இதை பரிசோதித்தபோது, அது போலி கணக்கு மூலமாக வந்த தகவல் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, வாரங்கல் சைபர் குற்றப்பிரிவு போலீஸில் எருகல சுதர்சன் புகார் அளித்தார்.

இதையடுத்து, சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்த போது, பிரதீப் வைஷ்ணவ் (24) என்ற இளைஞர் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இந்த நபர் தொடர்பாக மேலும் விசாரித்த போது, இவர், நாடு முழுவதும் 90-க்கும் மேற்பட்ட சைபர் மோசடி வழக்குகளில் தொடர்புடைய நபர் என்பதும், ரூ.1.50 கோடி வரை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

இந்த நபர் சென்னை சென்ட்ரலில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, இவரை பிடிக்க சென்ட்ரல் ஆர்.பி.எஃப் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில், சென்ட்ரல் ஆர்.பி.எஃப் ஆய்வாளர் மதுசூதனரெட்டி தலைமையில் ஆர்.பி.எஃப் போலீஸார் விசாரித்தபோது, அந்த நபர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆர்.பி.எஃப் போலீஸார் விரைந்து சென்று, அவரை நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள், பல்வேறு கிரெடிட், டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, வாரங்கல் சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சென்னை வந்த வாரங்கல் போலீஸாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x